நடிகர் மயில்சாமி மறைந்தார்.. மறக்க முடியாத மனிதர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Su.tha Arivalagan
Feb 19, 2023,07:57 AM IST

சென்னை: மக்களின் மனம் கவர்ந்தவர்கள் மறையும்போது வரும் சோகம் வார்த்தைகளில் அளவிட முடியாதது. அப்படிப்பட்ட மரணங்களைப் பார்க்கும்போது மனதுக்குள் வலிப்பதையும் தவிர்க்க முடியாது.. இதோ மயில்சாமி மறைந்து விட்டார்.


மனிதம் தவறாத மிகப் பெரிய  மனிதனாக வாழ்ந்து மறைந்துள்ளார் மயில்சாமி.. இல்லாதவர்களுக்கு ஓடி ஓடி உதவுதற்காகவே வாழ்ந்து வந்த மனிதன் மயில்சாமி. மனித நேயமும், நல்ல குணமும் கொண்ட மிகப் பெரிய மனிதராக திகழ்ந்தவர் மயில்சாமி.


சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த மயில்சாமிக்கு நேற்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு சென்றபோது அவர் உயிரிழந்திருந்தார். 


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்தான் மயில்சாமியின் சொந்த ஊர். இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார். சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்தபோது கே. பாக்கியராஜின்  தாவணிக்கனவுகள் படத்தில் அவருக்கு சின்ன ரோல் கிடைத்தது. கிடைத்த ரோலில் சிறப்பாக செய்து  அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். தொடர்ந்து காமெடியனாக பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு பெரிய நடிகர்களின் அறிமுகம் விரைவிலேயே கிடைத்தது. காரணம், அவரது  பழகும் தன்மை. எந்த ஈகோவும் பார்க்காமல் எளிமையாக அனைவரிடமும் பழகுவார் மயில்சாமி.


படிப்படியாக முன்னேறி முன்னணி காமெடியர்களில் ஒருவராக மாறினார் மயில்சாமி. அவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு 90களில் அவரது காமெடி   கொடி கட்டிப் பறந்தது. குறிப்பாக விவேக், வடிவேலு உடன் இணைந்து இவர் கொடுத்த படங்கள் சாகாவரம் படைத்த காமெடி விருந்துகள். 


தீவிர எம்ஜிஆர் ரசிகர் மயில்சாமி. அவரைப் போலவே வாழும் வள்ளலாகவும் திகழ்ந்தவர். கையில் காசு இருந்தால் அதை தனக்கென்று ஒதுக்காமல் யாருக்காவது தேவைப்பட்டால் அப்படியே கொடுத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார். இந்த நல்ல குணத்துக்காகவே அவருக்கு நிறைய நண்பர்கள். அப்படிப்பட்ட மயில்சாமி மறைந்திருப்பது ரசிகர்களை அழ வைத்திருக்கிறது.


வாழ்க்கை நிலையில்லாதது.. வாழும் வரை அர்த்தமுள்ளதாகவே அதை மாற்றிக் கொண்டு வாழுவோம்.. என்பதற்கு மயில்சாமிதான் சிறந்த உதாரணம்.