நடிகர் மாரிமுத்துவின் உடல் தகனம்.. சொந்த ஊரில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

Su.tha Arivalagan
Sep 09, 2023,03:40 PM IST
தேனி: நடிகர் இயக்குநர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் புதுமலைத்தேரியில் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் நடித்து வந்தார். அதில் அவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரம் தமிழ்நாடு முழுவதும் மிகப் பிரபலமாகி விட்டது. காரணம், அதில் அவர் நடித்த விதம், பேசிய வசனங்கள், பாடி லாங்குவேஜ் என்று அத்தனையிலும் அவர் பிரமிக்க வைத்து வந்தார்.



இந்த நிலையில் நேற்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் நடந்தது. அப்போது வசனம் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்துவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் போய் அவர் சேர்ந்தார். ஆனால் அதற்குள்ளாகவே அவர் பரிதாபமாக இறந்து போய் விட்டார்.

அவரது மரணம் அனைவரையும் உலுக்கி விட்டது. எதிர்பாராத நேரத்தில் வந்த இந்த மரணத்தால் திரைத் துறையினர், சின்னத்திரை கலைஞர்கள், பொதுமக்கள் என அனைவருமே அதிர்ச்சியில் மூழ்கினர். இந்த நிலையில் சொந்த ஊரான தேனி மாவட்டம் புதுமலைத்தேரிக்கு மாரிமுத்து உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இன்று காலை முதல் அவரது உடல் சொந்த வீட்டில் வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் இடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தகனம் செய்யப்பட்டது. அவரது மகன் மாரிமுத்துவின் சிதைக்கு தீ மூட்டினார்.