என்னாச்சு?.. ஆரணியை விட்டுட்டு வேலூருக்கு ஜம்ப் ஆன மன்சூர் அலிகான்.. அதுதான் காரணமா!

Meenakshi
Mar 07, 2024,05:53 PM IST

சென்னை:  லோக்சபா தேர்தலில், ஆரணி, திருவண்ணாமலை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய தொகுதிகளை இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி தேர்வு செய்து போட்டியிட உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.


இது போக கூட்டணி குறித்தும் தொடர்ந்து பேசிக் கொண்டிப்பதாகவும் கூறியுள்ளது அந்தக் கட்சி.


நடிகர் மன்சூர் அலிகான், இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை உருவாக்கி நடத்தி வருகிறார். முன்பு தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் கட்சி தொடங்கி 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த கட்சியின் பெயரைத்தான் தற்போது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என மாற்றி தேசிய அரசியலில் குதித்து விட்டார் மன்சூர் அலிகான். 




எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும். பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவது தான் எங்கள் கட்சியின் நோக்கம் என்றும் கூறி அரசியலில் தீவிரமாக இறக்கப்போவதாக அறிவித்திருந்தார்.  மேலும் லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவேன் என்றும் கூறியிருந்தார்.


மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடப்போவதாகும் அறிவித்திருந்தார். அது குறித்து அவர் முன்பு வெளியிட்ட அறிக்கையில், "மயிலம் மக்கள் மனம், மகிழம் பூ வாய் மகிழ! செஞ்சி கோட்டையின் செம்மாந்தர்கள் கொடி பறக்க, செய்யாறு மக்களின் சோற்றில் நெய்யாறு ஓட, நான் சுவாசி அல்ல, பந்தா வாசி அல்ல, மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வந்த-வாசி! அரசியல் பொதுநல, சந்நியாசி! போளூர் மக்களின் புகழூர் தாய்மார்கள் வயிற்றில் பால் வார்த்திடும், பாலூர், ஆரணியே, அன்ன பட்சினியே, நினை, என் மனதின் ஆழ்நிலை சக்தியாய், தாயாய், மகளாய் துதித்து, பணி செய்ய, ஆணையிடுவாய், தாழ்திறவாய், தரணி போற்றும், ஆரணியே! என்று ஆரணி தொகுதிக்குட்பட்ட பகுதிகளின் பெயர்களை வைத்து  அறிக்கை ஒன்றை எழுதி அசத்தியிருந்தார் மன்சூர் அலிகான். 


திண்டுக்கல்லு திண்டுக்கல்லு!




2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல்  தொகுதியில் போட்டியிட்டு, வித்தியாசமாக பிரச்சாரமும் செய்து திண்டுக்கல்லில் கலகலப்பை ஏற்படுத்தியவர்  மன்சூர் அலிகான். இந்த முறை ஆரணி தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்த மன்சூர் அலிகான், தற்போதுஆரணி தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதியில் தான் நிற்பதாகவும், பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. 


இருந்த போதிலும் ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவித்து தொகுதியில் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரணியில் பிரபலமான ஒருவர் போட்டியிடுகிறார். 


வேலூருக்கு மாறியது ஏன்?


ஆரணியில் நிற்பதாக இருந்த நடிகர் மன்சூர் அலிகான் இப்போது வேலூரில் நிற்பதாக முடிவ செய்யப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆரணியை விட்டு வேலூருக்கு மன்சூர் அலிகான் மாறியது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் சிஏஏ சட்டம் காரணமாக கடும் அதிருப்தியில் உள்ளனர். 


இந்த அதிருப்தியால்தான் கடந்த தேர்தலில் இங்கு அதிமுக கூட்டணிக்கு பெரும் தோல்வி கிடைத்தது. இந்த வாக்கு வங்கியில் தன்னால் முடிந்த அளவுக்கு ஓட்டையைப் போட மன்சூர் அலிகான் முடிவு செய்திருக்கலாம் என்றும், இதனால்தான் வேலூருக்கு அவர் மாற முடிவு செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.