Trisha controversy: "வில்லாதி வில்லன்" மன்சூர் அலிகான்.. முன் ஜாமீன்.. கேட்டு மனு தாக்கல்!

Su.tha Arivalagan
Nov 23, 2023,10:46 AM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் திரிஷாவை  சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனால் பல்வேறு தரப்பினரும் நடிகை திரிஷாவிற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கண்டனம்  தெரிவித்து வந்தனர். திரிஷதான் முதலில் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்தே மற்றவர்கள் இதுகுறித்து விமர்சிக்க ஆரம்பித்தனர்.

நடிகர் சங்கமும் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. ஆனால் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆவேசத்துடன் பேசிய மன்சூர் அலிகான், நான் எந்த  தவறும் செய்யவில்லை. நான் யாரிடமும் மன்னிப்பும் கேட்க முடியாது என்று சவால் விடும்படி மன்சூர் அலிகான்  தெரிவித்திருந்தார்.



இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தலையிட்ட தேசிய மகளிர் ஆணையம், மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு கோரிக்கை விடுத்தது. அதன் பேரில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது பெண்களின் உணர்வுக்கு குந்தகம் ஏற்படுத்துதல் மற்றும் பெண்களை இழிவு படுத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு தொடுத்தனர்.

இந்நிலையில்  ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று காலை 11 மணி அளவில் மன்சூர் அலிகான் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதனால் அவர் இன்று விசாரணைக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது முன்ஜாமின் கோரி கோர்ட்டுக்குப் போய் விட்டார் மன்சூர் அலி கான். சென்னை முதன்மை  அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு செய்துள்ளார்.  விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.