கமலுக்கு கொடுத்தது போல், எங்களுக்கும் அல்வா கொடுக்க கூடாது: மன்சூர் அலிகான் கிண்டல்

Meenakshi
Mar 09, 2024,05:07 PM IST

சென்னை: கமலஹாசனுக்கு திமுக தலைமை அல்வா கொடுத்தது போல், எங்களுடன் கூட்டணி பேசும் கட்சிகள் எங்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்து விடக்கூடாது என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.


நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் கட்சி தொடங்கி 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த கட்சியின் பெயரை தற்போது இந்திய ஜனநாயக புலிகள் கட்சி என மாற்றி தேசிய அரசியலில் குதித்துள்ளார். எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும். பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவது தான் எங்கள் கட்சியின் நோக்கம் என்றும் கூறி அரசியலில் தீவிரமாக இறக்கப்போவதாக அறிவித்திருந்தார்.


2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கலில்  போட்டியிட்டு, வித்தியாசமாக பிரச்சாரமும் செய்து திண்டுக்கல்லில் கலகலப்பை ஏற்படுத்தினார்  மன்சூர் அலிகான். இந்த முறை ஆரணி தொகுதியில் போட்டியிடுவேன் என்று கூறி வந்த மன்சூர் அலிகான், தற்போது ஆரணி தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதியில் நிற்பதாகவும், பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், நடிகர் மன்சூர் அலிகான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.




அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆரணி, திருவண்ணாமலை, திருபெரும்புதூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. இருந்த போதிலும் ஐந்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஓரிரு நாளில் அறிவித்து தொகுதியில் சென்று மக்களை சந்தித்து குறைகளை அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரணியில் பிரபலமான ஒருவர் போட்டியிடுகிறார். ஆரணியில் நிற்பதாக இருந்த நடிகர் மன்சூர் அலிகான் இப்போது வேலூரில் நிற்பதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டது.


இந்நிலையில், நடிகர் கமலஹாசனுக்கு அல்வா கொடுத்தது போல் எங்களுக்கும் அல்வா கொடுத்து விடக்கூடாது என்று கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஐயா பெரியோர்களே, தாய்மார்களே, தினதந்தி, தினகரன், தினமலர், தினமணி, ஆங்கிலம் நாளேடுகளே, மாலை முரசு, தமிழ் முரசு, மக்கள் குரல் உட்பட்ட அனைத்தும் ஊடகவியலாளர்களுக்கும், அனைத்து தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கும், அனைத்து youtube வித்தர்களுக்கும் தாழ் பணிவோடு மன்சூர் அலிகான் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து இந்த அறிக்கையை தங்களது இதழ்களும், தொலைக்காட்சிகளிலும் பிரசுரித்து எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்களுடைய மக்கள் தொடர்பாளர் கோவிந்தராஜன் அவர்கள் மூலமாக இந்த அறிவிப்பு வரும். ஏனென்றால், எங்களுடைய மதிப்பிற்குரிய கமலஹாசன்  அவருடைய பேர் இயக்கத்திற்கு சீட்டு இல்லை என்று அல்வா கொடுத்துவிட்ட நிலையில், எங்களுடன் கூட்டணி பேசிக்கொண்டிருக்கிற பெரிய கட்சிகளும் எங்களுக்கும் திருநெல்வேலி அல்வா கொடுத்துவிடக்கூடாது என்று மீண்டும் இறுதியாக, உறுதியாக  கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.