தேவையில்லாத கேஸ்.. ரூ. 1 லட்சம் அபராதம்..  மன்சூர் அலிகானுக்கு மேலும் அவகாசம் கொடுத்த ஹைகோர்ட்!

Meenakshi
Jan 19, 2024,03:30 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதத்தை செலுத்த கூடுதல் அவகாசம் அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அபராதத் தொகை அதிகமாக இருப்பதாக கூறி டைம் கேட்டு முறையிட்டிருந்தார் மன்சூர் அலிகான். 


லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. திரிஷா மட்டுமல்லாமல் இதற்கு முன்பு தன்னோடு நடித்த ரோஜா, குஷ்பு ஆகியோர் குறித்தும் கருத்து தெரிவித்திருந்தார் மன்சூர் அலிகான். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு திரிஷா உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணையமும் இதில் தலையிட்டது. மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில டிஜிபிக்கு  கோரிக்கை விடுத்திருந்தது.


இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான்  மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 ஏ, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டார். பதிலுக்கு த்ரிஷாவும் மன்னித்ததாக இணைய பக்கத்தில் தெரிவித்திருந்தார்.




எல்லாமல் நல்ல படியாக முடியப் போகிறது என்று நினைத்திருந்த நிலையில் திடீரென குட்டையைக் குழப்பினார்  மன்சூர் அலிகான். தனது முழு வீடியோவையும் பார்க்காமல் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உண்மையில் திரிஷாதான் வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். பேசுவதையெல்லாம் பேசி விட்டு அவர்கள் மீதே வழக்கு தொடர்ப்பீர்களா..  நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக கூறி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து அதிரடி உத்தரவிட்டார். மேலும் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தார். அபராதத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 


இந்நிலையில் தான் பெரும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அபராதத் தொகை பெரிதாக இருப்பதால் அதை செலுத்த கூடுதல அவகாசம் தேவை என்று கோரி மனு செய்தார் மன்சூர் அலிகான். அந்த மனு,  நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ஒருவர் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, அது ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகானுகு்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் அறிவுறுத்தினார். மேலும், பத்து நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.