RIP Manoj Bharathiraja.. நடிகர் - இயக்குநர் மனோஜ் பாரதி திடீர் மறைவு.. மாரடைப்பால் காலமானார்!
சென்னை: நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதி (வயது 48) மாரடைப்பால் காலமானார். இயக்குநர் பாரதிராஜாவின் மகன்தான் மனோஜ்.
இயக்குநர் பாரதிராஜாவுக்கு இரண்டு பிள்ளைகள். அதில் மூத்தவர்தான் மனோஜ் பாரதி. 2வது மகள் ஜனனி. மனோஜ் தனது தந்தை வழியில் இயக்குநராக விரும்பி, தந்தை வழியிலேயே முதலில் நடிகரானவர். தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தனது மகனை இயக்கி நடிகராக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. இந்தப் படத்திற்கு மணிரத்தினம் திரைக்கதை அமைத்திருந்தார். பாடல்களுக்காக பேசப்பட்டது இந்தப் படம்.
அதன் பிறகு வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூனா, விருமன், ஈஸ்வரன், மாநாடு என பல படங்களில் நடித்துள்ளார் மனோஜ். மாநாடு படத்தில் இவரது கேரக்டர் பேசப்பட்டது. மார்கழித் திங்கள் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் மனோஜ்.
இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு ஓய்வில் இருந்து வந்த மனோஜுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
மறைந்த மனோஜுக்கு நந்தனா என்ற மனைவியும், மதிவதனி, ஆர்த்திகா என இரு மகள்களும் உள்ளனர். மனோஜ் பாரதியின் மறைவு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மகனின் மறைவுச் செய்தியால் இயக்குநர் பாரதிராஜா உடைந்து போயுள்ளார். திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் மனோஜ் பாரதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் திரு. மனோஜ் அவர்கள். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ்.
இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.