அக்டோபர் முதல் மார்ச் வரை மட்டுமே படங்களில் நடிப்பேன்.. மற்ற நேரங்களில் ரேஸ்.. அஜீத் அறிவிப்பு

Su.tha Arivalagan
Jan 10, 2025,06:12 PM IST

சென்னை: அதிக அளவிலான ரேஸ்களில் கலந்து கொள்வதற்கு வசதியாக, ரேஸிங் பீரியட் அல்லாத  அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை மட்டுமே திரைப்படங்களில் நடிக்கப் போவதாகவும், மற்ற மாதங்களில் கார்ப் பந்தயங்களில் அதிக அளவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் நடிகர் அஜீத் அறிவித்துள்ளது திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.


கிட்டத்தட்ட வருடத்தில் பாதி மாதங்கள் மட்டுமே தான் நடிக்கப் போவதாக அஜீத் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் வருடத்திற்கு ஒரு படம் என்ற அளவில் மட்டுமே நடிக்க முடியும். விஜய் ஒரு பக்கம் ஓய்வை அறிவிக்கவுள்ள நிலையில், அவரது சக போட்டியாளரான அஜீத்தும் படங்களைக் குறைக்கவிருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதேசமயம் இனி அஜீத்தை சர்வதேச அளவில் அதிக அளவிலான கார்ப்பந்தயங்களில் காண முடியும் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.




24எச் சீரிஸ் என்ற தொலைக்காட்சிக்கு இதுதொடர்பாக அஜீத் அளித்துள்ள பேட்டியில், நான் திரைப்படங்களிலும் நடித்து வருவதால் அதிக அளவிலான கார்ப்பந்தயங்களில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்தேன். பிஎம்டபிள்யூ பார்முலா சாம்பியன்ஷிப், பிரிட்டிஷ் பார்முலா 3 உள்ளிட்ட பல கார்ப்பந்தயங்களில் கலந்து கொண்டுள்ளேன்.


இரண்டு துறையில் இருப்பதால் பல கார்ப்பந்தயங்களில் கலந்து கொள்ள முடியவில்லை. இனிமேல் ஒரு கார் டிரைவராக மட்டுமல்லாமல், டீம் ஓனராகவும் இனிமேல் நான் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே கார்ப்பந்தய சீசன் அல்லாத அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நான் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன். மற்ற சமயங்களை ரேஸுக்கு ஒதுக்கவுள்ளேன். எனவே எனது நடிப்பு குறித்து யாரும் ஏமாற்றமடைய வாய்ப்பு இருக்காது என்று கூறியுள்ளார் அஜீத்.


விஜய் அரசியலில் கலக்கக் களம் புகுகிறார்.. மறுபக்கம்  அஜீத் ரேஸில் அதகளம் செய்யத் தயாராகிறார்.. இரு ரசிகர்களுக்கும் இனி களங்கள் வேறு.. விஜய்யும், அஜீத்தும் இதில் எப்படிக் கலக்கப் போகிறார்கள் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


சும்மா சொல்லக் கூடாது.. நடிப்பின் உச்ச நிலையில் இருக்கும் இருவரும் அதை விட்டு புதிய களங்களில் ரிஸ்க் எடுக்கத் துணிவது ஆச்சரியம்தான்.


விடாமுயற்சி + அமர்க்களமான வெற்றி = அஜீத்




53 வயதாகும் நடிகர் அஜீத் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். அப்படி தன்னை அழைக்க வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்புதான் அஜீத் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும் ரசிகர்கள் அதை முழுமையாக ஏற்கவில்லை. தொடர்ந்து செல்லமாகவே அழைத்து தங்களது அன்பைப் பொழிந்து வருகின்றனர். இதை விட முக்கியமாக சில வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தையும் கலைத்து விட்டவர் அஜீத். தான் உண்டு, தனது நடிப்பு உண்டு என்று தனது பாதையில் போய்க் கொண்டே இருக்கும் அஜீத், தனது ரசிகர்களையும் முதலில் குடும்பத்தைப் பாருங்கள். பிறகு எனது படங்களை ரசியுங்கள், என்று கண்டிப்பான கோரிக்கையும் வைத்தவர்.


நடிகை ஷாலினியை காதலித்து மணந்த அஜீத்துக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தமிழில்தான் அதிக அளவிலான படங்களில் நடித்துள்ளார் அஜீத்.  இதுவரை 61 படங்களில் நடித்துள்ள அஜீத், பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். 1990ம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தில்தான் முதல் முறையாக அவர் தமிழில் நடித்தார். ராஜாவின் பார்வையிலே அவருக்கு வணிக ரீதியாக நல்ல அங்கீகாரம் கொடுத்த படமாகும். அதைத் தொடர்ந்து ஆசை படம் அவரை ஒரு ஸ்டாராக உயர்த்தியது. தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார் அஜீத்.  காதல் கோட்டை அவரை உச்சத்திற்குக் கொண்டு போனது. தொடர்ந்து அவள் வருவாளா, அமர்க்களம், காதல் மன்னன், வாலி என்று அதிரடி காட்டி வந்தார் அஜீத். அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த அஜீத், தொடர்ந்து பல தோல்விப் படங்களையும் கொடுத்த நடிகர். ஆனாலும் தனது தொடர் முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் அந்தத் தோல்விகளை வெற்றிப் படிக்கட்டுக்களாக்கி உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர்.


பில்லா, மங்காத்தா என பிளாக்பஸ்டர் படங்களையும் கொடுத்துள்ளார். தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்துள்ளார் அஜீத். இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்