வெயிலின் தாக்கத்தால்.. எகிரும் ஐஸ்கிரீம் விலை.. நாளை முதல் அமலுக்கு வரும்.. இப்பவே கண்ண கட்டுதே..!

Manjula Devi
Mar 02, 2024,09:28 PM IST
சென்னை: ஐஸ்கிரீம்களின் விலை ரூ 2 முதல் 5 வரை உயர்த்தப்படுவதாகவும், இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் பால்வளத் துறையின் கீழ் ஆவின் கூட்டுறவு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆவின் நிறுவனத்தில் பல்வேறு பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் பால், தயிர், மோர், நெய், ஐஸ்கிரீம் வகைகள், குளிர்பானங்கள், போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வருடம் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது . இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மக்கள் வெயிலுக்கு இதமான இளநீர், தர்பூசணி, ஐஸ்கிரீம், குளிர்பான வகைகள், போன்றவற்றை தேர்ந்தெடுத்து வருகின்றனர். ஏனெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலினால் ஏற்படும் தாகத்தை தணிக்க குளிந்த உணவுகளே மக்களுக்கு முதல் சாய்ஸாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஜில்‌ ஜில் ஐஸ்கிரீம் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான உணவுப் பொருளாக இருக்கிறது.



இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் விலை  2 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சாக்கோபார் கோன், வெண்ணிலா, கிளாசிக் கோன், சாக்லேட் உள்ளிட்ட ஐஸ்கிரீம்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

65 எம் எல் அளவு கொண்ட சாக்கோபாரின் விலை ரூபாய் 20 இலிருந்து 25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் எனவும் ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் சார்பில் ஐஸ்கிரீம்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.