ஜெயம் ரவியுடன் பேச இப்போது வரை காத்திருக்கிறேன்.. திருமணத்தை மதிக்கிறேன்.. ஆர்த்தி ரவி

Su.tha Arivalagan
Sep 30, 2024,06:08 PM IST

சென்னை: நடிகர் ஜெயம் ரவியுடன் தனிப்பட்ட முறையில் பேசித் தீர்வு காண இப்போது வரை காத்திருப்பதாகவும், திருமணத்தின் புனிதத்தை மதிப்பதாகவும் அவரது மனைவி ஆர்த்தி ரவி தெரிவித்துள்ளார்.


ஜெயம் ரவி - ஆர்த்தி ரவி விவகாரம் நாளுக்கு நாள்  விஸ்வரூபம் எடுத்தபடியே இருக்கிறது. முதலில் மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த முடிவை ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார். எனக்கோ, பிள்ளைகளுக்கோ இது தெரியாது என்று ஆர்த்தி ரவி அறிக்கை விட்டார்.


இதையடுத்து தனது பிறந்த நாளன்று விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்தார் ஜெயம் ரவி. அடுத்து தனது வீட்டிலிருந்து  பொருட்களை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தின் உதவியை நாடினார் ஜெயம் ரவி. இப்படி அடுத்தடுத்து நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில் யூடியூப் சானல்கள் பலவும் இவர்களது வாழ்க்கை குறித்து குண்டக்க மண்டக்க பேசிக்கொண்டுள்ளனர். பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே இந்த யூடியூப் சானல்கள் விடும் கதைகள் அயர்ச்சி அடைய வைப்பதாக உள்ளது.


இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி மும்பை போய் விட்டார். மறுபக்கம் ஆர்த்தி ரவி மீண்டும் ஒரு அறிக்கையை இன்று மாலை வெளியிட்டுள்ளார். அதில் அவர்  கூறியிருப்பதாவது:




என்னைச் சுற்றி, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொது வெளியில் பலரும் பல விதமாக பேசி வரும் நிலையில், அதுகுறித்து நான் எதுவும் பதிலளிக்காமல் அமைதியாக இருப்பதை  பலவீனமாகவோ அல்லது நான் குற்றவாளி என்பது போலவோ யாரும் கருதி விட வேண்டாம். நான் கண்ணியத்துடன் அமைதி காக்க விரும்புகிறேன். என்னைப் பற்றி உண்மையை மறைத்து, மோசமாக சித்தரிப்போருக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை, தவிர்க்கவே விரும்புகிறேன்.  ஆனால் சட்டம் எனக்கு நீதி பெற்றுத் தரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.


என்னை விட்டுப் பிரிவதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, அது மியூச்சுவல் இல்லை என்பதை உணர்த்த, நான் எனது முதல் அறிக்கையை வெளியிட நேர்ந்தது.  இப்படி ஒரு முடிவை எடுத்தது எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததாக நான் அதில் தெரிவித்திருந்தேன்.  ஆனால் எனது வார்த்தைகளை சிலர் தவறாக எடுத்துக் கொண்டுள்ளனர். தவறான அர்த்தம் கற்பித்துக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவருடன் தனிப்பட்ட முறையில் நான் பேச ஆர்வத்துடன் இப்போது வரை காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை, மறுக்கப்பட்டுள்ளது.


திருமணத்தின் புனிதத்தை நான் ஆழமாக மதிக்கிறேன். இதை பொது வெளியில் பேசுவதால் மனம் புண்படும் என்பதையும் உணர்ந்துள்ளேன். எங்களது குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும். அதில் தான் எனது முழுக் கவனமும் உள்ளது. இந்த விஷயத்தில் கடவுளின் வழிகாட்டுதலை நான் நம்பியுள்ளேன்.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்