பிறந்தது ஆடி மாதம் 2024 : அம்மனின் அருளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ?

Aadmika
Jul 17, 2024,09:14 PM IST

சென்னை : ஆடி மாதம் என்பது அம்மன் அருளை பெறுவதற்குரிய மாதமாகும். சூரிய பகவான், கடக ராசியில் தனது பயணத்தை மேற்கொள்ளும் மாதம் என்பதால் இதை கடக மாதம் என்றும் சொல்லுவதுண்டு. தட்சிணாயன புண்ணிய காலத்தின் துவக்க மாதம் என்பதால் ஆடி மாதம் முன்னோர் வழிபாட்டிற்கும் ஏற்ற மாதமாக சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட அம்மனின் சக்தி அதிகமாக காணப்படும். ஆடி மாதத்தில், சிவனின் ஆற்றலே, சக்திக்குள் அடங்கி இருக்கும் என சொல்லப்படுகிறது.


மற்ற எந்த தமிழ் மாதத்திற்கும் இல்லாத சிறப்பாக ஆடி மாதத்தில் மட்டும் தான் திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பு பெறுகிறது. ஆடி மாதத்தில் மாதப்பிறப்பு துவங்கி ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி, ஆடி 18 என அனைத்தும் சிறப்புக்குரிய மாதமாகும். தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதமும் இந்த மாதத்தில் தான் வருகிறது. ஆடி மாதத்தில் எந்த நாளில் வேண்டுமானாலும், எந்த தெய்வத்தையும் வழிபடலாம். இந்த மாதத்தில் செய்யப்படும் வேண்டுதல், வழிபாடு, தானம், மந்திர ஜபம் ஆகிய அனைத்தும் பல மடங்கு அதிக பலன் தரக் கூடியதாகும்.




ஆடி மாதத்தில் ஏன் சுப காரியம் கூடாது?


ஆடி மாதத்தில் சூரியனின் இருந்து சூட்சுமமான ஆற்றல்கள் வெளிவரும். அது மட்டுமின்றி ஆடி மாதம் என்பது தேவர்களின் இரவுப் பொழுது துவங்கும் மாதமாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும், அனைத்து தெய்வங்களும் உறங்க செல்லும் காலம் என்பதால், திருமணம் போன்ற சுப காரியங்களில் செய்யப்படும் பூஜைகள் உள்ளிட்டவற்றை ஏற்க வர மாட்டார்கள் என்பதாலேயே ஆடி மாதத்தில் எந்த சுப காரியங்களும் நடத்தப்படுவது கிடையாது. இறைசக்தி அதிகம் நிறைந்த மாதம் என்பதாலேயே ஆடி மாதத்தில் விரதம் இருக்க வேண்டும், வழிபாடுகள் செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது.


அறிவியல் ரீதியாகவும் இது பருவநிலை மாறும் காலம் என்பதால் இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவற்றை செய்யக் கூடாது என பெரியோர்கள் சொல்லுவதுண்டு. அதோடு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும், எளிமையான உணவுகளான கூழ் போன்ற உணவுகளை அம்மனுக்கு படைக்கும் வழக்கம் உள்ளது.  வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை இந்த மாதத்தில் அதிகம் பயன்படுத்துவதற்கும் இதுவே காரணமாகும். 


குல தெய்வ வழிபாடு சிறந்தது


ஆடி மாதத்தின் முதல் நாளில் அம்மனையும், குலதெய்வத்தையும் வீட்டிற்கு அழைத்து, வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானதாகும். இதனால் அடுத்த 11 மாதங்களும் நம்முடைய வாழ்க்கை சிறப்பானதாக இருக்க அவர்கள் அருள் செய்வார்கள் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கன்று திருமணமான பெண்கள் தாலிச்சரடி மாற்றிக் கொண்டால், கணவரின் ஆயுள் நீடிக்கும். ஆடி ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலும், கோவிலிலும் கூழ் செய்து அம்மனுக்கு படைத்து, மற்றவர்களுக்கும் வழங்கினால் திருமண தடைகள் நீங்கும்.


ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு அணிவித்த பிறகு பிரசாதமாக வழங்கப்படும் வளையல்களை பெண்கள் அணிவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மங்கலங்கள் நிறையும். 


இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதம் இந்த ஆண்டு ஜூலை 17ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 16ம் தேதி வரை உள்ளது. வளர்பிறை ஏகாதசியில் ஆடி மாதம் பிறப்பது கூடுதல் சிறப்பானதாகும். ஜூலை 21ம் தேதி ஆடிப்பெளர்ணமியும், ஆகஸ்ட் 3ம் தேதி ஆடி 18 எனப்படும் ஆடிப் பெருக்கும், ஆடி 04ம் தேதி ஆடி அமாவாசையும், ஆகஸ்ட் 16ம் தேதி வரலட்சுமி விரதமும் வருகிறது. ஆடி மாதம் முழுவதும் அம்மனை வழிபட முடியாதவர்கள் குறிப்பிட்ட இந்த நாட்களில் வழிபட்டு அம்மனின் அருளை பெறலாம்.