ஆடி அமாவாசை.. ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்.. தர்ப்பணம், புனித நீராடல்
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடி வழிபட்டனர்.
ஆடி அமாவாசை தினம் இன்று. இந்த நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது வழக்கம். ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மக்கள் இதற்காக கூடி தர்ப்பணம் கொடுத்து வழிபடுவார்கள். ராமேஸ்வரத்தில் அமாவாசை சமயங்களில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் அதிக அளவில் கூடுவார்கள். அந்த வகையில் இன்றும் மக்கள் தர்ப்பணம் கொடுக்கவும், திதி தரவும் கூடினர். இதனால் ராமேஸ்வரம் முழுவதும் கூட்டம் அலைமோதுகிறது . ராமநாதசாமி கோவிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
ராமேஸ்வரத்தில் உள்ள 22 அக்னி தீர்த்தங்களிலும் பக்தர்கள் வரிசை நீண்டு காணப்படுகிறது. ராமேஸ்வரம் கோவில், கடற்கரை, அக்னி தீர்த்தங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடி அமாவாசையையொட்டி விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
நெல்லையில் தாமிரபரணி ஆறு, திருச்செந்தூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, மதுரை வைகை நதி உள்ளிட்ட நீர் நிலைப் பகுதிகளில் இன்று தர்ப்பம் கொடுக்க, திதி தர ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியுள்ளனர்.