100 நாள் வேலை .. சம்பளம் வேணும்னா.. ஆதார் நம்பரை இணைக்க வேண்டும்!

Su.tha Arivalagan
Aug 28, 2023,02:43 PM IST
டெல்லி: 100 நாள் வேலைத் திட்டத்தில் இனி சம்பளம் வாங்க வேண்டும் என்றால் உங்களது ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்று மத்திய  அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆதார் அட்டை அடிப்படையிலான சம்பள திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை பார்ப்போர், சம்பளம் பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியமாகும். செப்டம்பர் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. தற்போது இந்தத் திட்டத்தில் சேர ஆகஸ்ட் 31ம் தேதி வரை மத்தியஅரசு அவகாசம் கொடுத்துள்ளது. அதற்குள் ஆதார் எண்ணை இணைத்து விட வேண்டும். அதைச் செய்யத் தவறினால் செப்டம்பர் 1ம் தேதி முதல் சம்பளம் வாங்க முடியாது.



தற்போது நாடு முழுவதும் உள்ள 2.77 கோடி 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களில் இதுவரை 19.4 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனராம்.  ஆனால் இந்தத் திட்டத்துக்கு பல்வேறு செயற்பாட்டாளர்களும் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். இது சட்டவிரோதமானது என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.

ஏழை மக்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருந்து வருவது 100 நாள் வேலைத் திட்டம். இந்தத் திட்டத்தை பலவீனமாக்கவும், இதில் இடம் பெற்றுள்ள ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவுமே மத்திய அரசு இப்படிச் செய்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மஸ்தூர் கிசான் சக்தி சங்கத்தின் தலைவரான நிகில் டேய் கூறுகையில், கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இதுமிகப் பெரிய எண்ணிக்கையாகும். அதாவது 20 சதவீத ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு பறி போகப் போகிறது. ஆதார் எண் இணைப்பு என்பது மிகப் பெரிய சட்டவிரோதமான நடவடிக்கையாகும். 2005ம் ஆண்டு சட்டப்படி யாருக்கெல்லாம் வேலை பார்க்கத் தகுதி இருக்கிறதோ அவர்கள் எல்லாம் வேலை பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும். அதைத் தடுக்க முயற்சிக்கக் கூடாது என்றார்.

என்ன செய்ய வேண்டும்

மத்திய அரசின் திட்டப்படி 100 நாள் வேலைத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கை இணைத்து அந்த வங்கியின் கிளைக்குச் சென்று என்பிசிஐ மேப்பிங் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி  செய்ய வேண்டும். இதைச் செய்யத் தவறினால் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது, 100 நாள் வேலைத் திட்டத்தில் தொடரவும் முடியாது.