தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் ஏப்ரல் ஐந்தாம் தேதி மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும் பெற மின்சார வாரியம் சார்பாக சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கும் மின் பகிர்வுகள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின் பயன்பாட்டை பொறுத்து தான் மின்சார கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் மின்சார வாரியத்தில் 1912 அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இது தவிர
TNEB மொபைல் ஆப் மூலமாகவும், https://www.tangedco.gov.in/ என்ற இணையதளம் வாயிலாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருக்கள், வீடுகளில் மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள், உள்ளிட்ட பல்வேறு மின்சார புகார்கள் எழுந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மின்சாரம் தொடர்பான புகார்களில் நடவடிக்கை எடுக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின்மீட்டர்கள், குறைந்த மின் அழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சார தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் 5.4.2025 சனிக்கிழமை அன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் (executive Engineer/ O&m and office) அலுவலகங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.