ஐபோன் வந்தாகணும்.. 3 நாள் பட்டினி கிடந்து சாதித்த மகன்.. அந்த பூக்காரம்மா கண்ணில் சோகத்தைப் பாருங்க!
டெல்லி: வேலை வெட்டி எதற்கும் போகாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு வாலிபன், தனது தாயாரிடம் அடம் பிடித்து, 3 நாட்களாக சாப்பிடாமல் பட்டினி கிடந்து, அவருக்கு நெருக்கடி கொடுத்து தனது காரியத்தை சாதித்துக் கொண்டுள்ளான். அந்த வாலிபன் சாதித்தது என்ன தெரியுமா.. தனது தாயாரை வற்புறுத்தி விலை உயர்ந்த ஐபோனை வாங்கியதுதான்!
இந்தக் காலத்து இளைஞர்கள் என்று ஆரம்பித்தாலே.. வந்துட்டாங்கடா பூமர் அங்கிள்.. பூமர் ஆன்ட்டி என்றுதான் பலர் அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இன்றைய பிள்ளைகள் சிலர் செய்யும் செயலைப் பார்த்தால் அயர்ச்சியாகத்தான் வருகிறது. அடம் பிடித்தால் பிடித்ததுதான்.. யார் எப்படி போனால் என்ன.. நான் நினைத்தது நடக்க வேண்டும் என்று அப்படி அடம் பிடிக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தாங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
பணம், பொருள் என்று எதற்குமே மதிப்பு இல்லை. சர்வ சாதாரணமாக அதை அடைய விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட சிலரால் பல பெற்றோர்கள் படும் சிரமங்களும், கஷ்டங்களும் சொல்லில் வடிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது நடந்துள்ளது. எந்த ஊர் என்று தெரியவில்லை. ஒரு எக்ஸ் தள பதிவர் இதை பகிர்ந்துள்ளார்.
அந்தத் தாய் ஒரு சாதாரண பூ கட்டி விற்கும் பெண்மணி. ஐபோன் கடையில் தனது மகனுடன் போன் வாங்க வந்துள்ளார். அவர்களைப் பார்த்தாலே தெரிகிறது அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள் என்று. மகன் முகத்தில் ஐபோனை வாங்கிய பூரிப்பு தெரிகிறது. தாயார் முகத்திலோ சோகம் அப்பிக் கிடக்கிறது. அரும்பாடு பட்டு சேர்த்து வைத்த காசு இப்படிப் போகிறதே என்ற வருத்தம் அது. கஷ்டப்பட்டு சம்பாதித்தால்தான் அந்த சோகத்தை உணர முடியும் என்பதை அவரது முகம் சொல்லாமல் சொல்கிறது.
இந்த தாயாரின் சோகத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. அவரது மகன் ஐபோன் கேட்டு வந்துள்ளார். என்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று தாயார் கூறி வந்துள்ளார். அவ்வளவுதான் மகன் மிரட்டும் வேலையில் இறங்கி விட்டான்.. எப்படி தெரியுமா.. 3 நாட்களா ஒரு நேரம் கூட சாப்பிடவில்லையாம். தண்ணீர் குடிக்காமல், சாப்பிடாமல் தனது தாயாரை மிரட்டி வந்துள்ளான். மகன் காட்டிய பிடிவாதத்தைப் பார்த்து தாயார் பயந்து போய் விட்டார். பெற்ற வயிறாச்சே.. மகன் கஷ்டப்படுகிறானே என்று தவித்துப் போய் அவன் கேட்ட பணத்தை எப்படியோ திரட்டி் கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்படிக் கொடுத்த பணத்தில்தான் இதோ இந்த மகன் ஐபோனை வாங்கிக் கொண்டு பெருமிதமாக போஸ் கொடுத்துள்ளார்.
இவர்களைப் பார்த்த செல்போன் கடைக்காரர் அந்த தாயாரிடம் பேச்சு கொடுத்தபோது, நான் கோவில்களுக்கு வெளியே பூ விற்கிறேன். 3 நாளா சாப்பிடாம பட்டினி கிடந்து இவன் சாதிச்சுட்டான். இந்த போன் இல்லாட்டியும் எங்க நிலைமை இதுதான்.. இப்ப போன் வந்த பிறகும் கூட இதே நிலைதான். இது மாறப் போறதில்லை. என் மகனுக்குப் பிடிச்சதை வாங்கிக் கொடுத்தது மகிழ்ச்சிதான். ஆனால் அவன் சம்பாதிச்சு இதை எனக்கு கொடுக்கணும் என்று கூறியுள்ளார் சோகத்துடன்.
இந்த பதிவுக்கு பலரும் வந்து கமெண்ட் கொடுத்தபடி உள்ளனர். இப்படியெல்லாமா பிள்ளைகள் இருப்பார்கள் என்று பலர் விமர்சித்துள்ளனர். இப்படி மிரட்டி காரியம் சாதிப்பது அபாயகரமானது. இதையெல்லாம் பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்