அருமை மழலையும் பேரழகுத் தமிழும்!
Feb 15, 2025,04:59 PM IST
ஓ மழலை அரும்பே
நீ என் கருவில் உருவான உயிரெழுத்து
என் மெய் தொட்டு விளையாடும் மெய்யெழுத்து
என்னை அம்மா என்றழைக்கும் முதலெழுத்து
என்னைச் சார்ந்து வளரும் சார்பெழுத்து
நீ தேம்பி அழுவது அளபெடை
நான் உன்னை ஆற்றுவது ஆற்றுப்படை
நீ உறங்க அழுவது அகவல்
உன்னை நான் தாலாட்டுவது பிள்ளைத்தமிழ்
நீ மகிழும் விளையாட்டுக்கள் திருவிளையாடற்புராணம்
நீ செய்யும் குறும்புகள் பெரிய புராணம்
நீ பேசும் மழலைப் பேச்சு திருவாசகம்
நீ உதிர்க்கும் புன்னகை தேவாரம்
நீ ஈரடி நடந்தால் திருக்குறள்
நீ நான்கடி நடந்தால் நாலடியார்
நீ எட்டடி நடந்தால் எட்டுத்தொகை
நீ பத்தடி நடந்தால் பத்துப்பாட்டு
நீ என் வாழ்வின் இலக்கணம்
நான் நித்தம் படிக்கும் இலக்கியம்
கவிதை: வி. ராஜேஸ்வரி
Assistant, College Office, The Madura College (Autonomous), Madurai -625 011.