வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. வானிலை மையம் தகவல்

Meenakshi
Oct 12, 2024,05:37 PM IST

சென்னை:   வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுவும் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக மழை பொழிய உள்ளதாகவும் முன்னரே வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று வானிலை மையம்  மழை குறித்த எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.




அதன்படி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது தீவிரமடைந்து வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதுவும் இது வருகின்ற அக்டோபர் 14ம் தேதி உருவாக  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தீவிரமடைந்து பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.


முன்னதாக அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும்  மகாராஷ்டிர பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று அக்., 13ம் தேதி காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது வானிலை மையம்.


மேலும், அக்டோபர் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்  எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் போது தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட தென் தீபகற்பப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்