2,2 ஆ காதல் வாழ்க்கையை பிரிச்சுக்கோ.. இப்போ எந்த 2ல் நீ இருக்க தெரிஞ்சுக்கோ.. 2:2:2.. புது பார்முலா

Su.tha Arivalagan
Sep 24, 2024,08:51 PM IST

இப்பெல்லாம் காதல் வாழ்க்கை கூட சீக்கிரத்தில் கசந்து போய் விடுகிறது. அப்படி இருக்கையில் கல்யாண வாழ்க்கை மட்டும் இனிக்குமா என்ன.. அதுவும் கூட சீக்கிரமே போரடித்து விடுகிறது பலருக்கு. அப்படிப்பட்ட போர் மனநிலையில் உள்ளவர்களுக்காக ஒரு புது காதல் பார்முலாவை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தம்பதிகள்.


அது என்ன காதல் பார்முலா.. அப்படின்னு நீங்க கேட்கலாம். ஆமாங்க ஆமா, இதுவும் கூட காதல் பார்முலாதான். அதாவது 2:2:2 என்பதுதான் இந்த புதிய காதல் பார்முலா.


இக்காலத்து இளம் தம்பதிகள் இதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்களாம். இதை பாலோ செய்வதால் குடும்ப வாழ்க்கையில் மேலும் ஈடுபாடும், ரசனையும் ஏற்படுவதாகவும், போரடிக்கும் மனப்பான்மை மாறுவதாகவும், சுவாரஸ்யம் கூடுவதாகவும், அன்பு அதிகரிப்பதாகவும் அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள். அது கிடக்கட்டும்.. இது என்ன 2: 2: 2 ?


முதல் 2:




அதாவது முதல் 2க்கு என்ன அர்த்தம்னா ஒவ்வொரு 2 வாரத்திற்கு ஒரு முறை டேட்டிங் போக வேண்டுமாம். இப்பெல்லாம் ஜோடியாக வெளியில் போவதே அரிதாகி விட்டது. காரணம், வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், குடும்பம், குட்டி என்று டைட்டாக ஓடிக் கொண்டுள்ளனர் எல்லோரும். இதனால் மனம் விட்டு தனியாக அமர்ந்து பேசக் கூட பலருக்கு நேரம் கிடைப்பதே இல்லை. அப்படி இருக்காதீங்க.. குறைந்தது 2 வாரத்திற்கு ஒரு முறையாவது ஜாலியா வெளில போய்ட்டு வாங்க.. ஆற அமர்ந்து மனம் விட்டு பேசிட்டு வாங்க அப்படின்னு இந்த முதல் 2 சொல்லுது.


அதுல முக்கியமானது என்னன்னா.. பட்டப் பகல்ல மொட்ட வெயில்ல இந்த டேட்டிங் போய்ராதீங்க.. ஈவ்னிங் அல்லது நைட் டேட்டிங்கா இது இருக்கணும்.. அப்பதான் விரும்பும் எபக்ட் கிடைக்கும்!


2வது 2:




2வது இரண்டுக்கு என்ன அர்த்தம்னா,  2 மாதத்திற்கு ஒருமுறை வார இறுதியில் வெளியில் எங்காவது போய் விட்டு வர வேண்டும். அதாவது சற்று தொலைவுக்கு ஒரு பிக்னிக் போல போக வேண்டும். வார இறுதி நாட்கள் என்றால் வெள்ளி, சனி போல அல்லது சனி, ஞாயிறு போல குட்டியாக ஒரு பிக்னிக் போகலாம். ஏதாவது டூரிஸ்ட் ஸ்பாட். மலைவாசஸ்தலம் இப்படி ரம்மியமான இடங்களுக்குப் போவது நல்லது. இது போல போவதன் மூலமாக நமது மன அழுத்தம், மன உளைச்சல், சோர்வு உள்ளிட்டவை குறைந்து நமது துணையுடன் நெருக்கம் அதிகரிக்குமாம்.


3வது 2:




சரி செஞ்சுடலாம்.. அந்த 3வது 2 என்ன தெரியுமா.. 2 வருடத்திற்கு ஒருமுறை ஒரு நீண்ட விடுமுறைப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அதுதான் இந்த 3வது 2.  இந்த நீண்ட விடுமுறை பயணம் என்பது கேரளா டூர், கோவா டூர்.. இப்படி ஒரு லாங்கான பயணமாக இருக்கலாம்.  குடும்பத்தோடும் போகலாம் அல்லது தம்பதியாக தனியாகவும் போகலாம். நாலைந்து நாட்கள் இருப்பது போல போகலாம். நாட்கள், ஊர் போன்றவற்றை உங்கள் வசதிக்கேற்ப நீங்களே நிர்ணயிச்சுக்கங்க. இதுபோன்று போவதன் மூலம் குடும்பத்தில் மேலும் அன்பும், அக்கறையும், பாசமும் அதிகரிக்குமாம்.


மன நெருக்கம் அவசியம்:




உறவுகளை பலப்படுத்துவதற்கு முதல் முக்கியத் தேவையே மன நெருக்கம்தான். சேர்ந்து இருந்தால்தான் உறவு பலமாக இருக்கும் என்று இல்லை.. மனசு சேர்ந்து இருந்தாலே கூட போதும், உறவு வலிமையாக இருப்பதை உறுதி செய்ய. இன்று நாம் எல்லாவற்றுக்கும் ஓடிக் கொண்டேதான் இருக்கிறோம்.. காரணம், தேவைகள் அப்படி இருக்கின்றன. அப்படி ஓடும்போது உங்கள் துணையுடன் இதுபோல அவ்வப்போது ரிலாக்ஸ்டாக ஓடவும் பழகிக்குங்க.. அது உங்களது உறவையும், காதலையும், அன்பையும் வலுப்படுத்த உதவும்.. என்னங்க 2:2:2 காதல் பார்முலா நல்லாருக்கா.. பாலோ பண்ணிப் பார்க்கலாமா??



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்