கோடை வெயிலும் குளிரத் தொடங்கியது அவளது அரவணைப்பில்....!

Su.tha Arivalagan
Apr 02, 2025,04:43 PM IST

- தேவி


சுட்டெரிக்கும் வெயிலும் 

குளிரத் தொடங்கியது 

அவள் பார்வையை தீண்டும் நொடியில்


வியர்வைத் துளியும் 

அமுதமாக தோன்றியது 

அவளது வாசனையை 

உணரும் நொடியில்.....


சூரிய ஒளியில் 

மரத்தின் நிழலும் 

மௌனம் காத்தது 

அவளது வருகையைக் கண்டு......


அவளது இதழ்களைத் தழுவும் 

சூரிய ஒளியை கண்டு 

கோபம் கொண்டது 

எனது வியர்வை துளிகள்.....


நிலவின் அழகினை போல 

சூரிய ஒளியையும் தேடி அலைகின்றேன் 

உன்னுடன் இருக்கும் நிமிடங்களுக்காக.....




மரத்தினை கொஞ்சும் இலைகளைப் போல 

சுடும் வெப்பத்தினையும் ரசிக்க ஆரம்பித்தேன் 

உன் வியர்வை துளிகளை ஒற்றி எடுப்பதற்காக


வேரின் ஆழத்தை 

சூரிய ஒளிகள் தொடுவதில்லை 

அதுபோல 

உன் வெப்ப மூச்சுக்காற்றை 

மற்றவரை தொட விடுவதில்லை என் மனம் .....


கோடை வெயிலும் 

குளிரத் தொடங்கியது 

அவளது அரவணைப்பில்....


தென்றலையும் வெறுக்கத் தொடங்கினேன் 

அவளது  அனல் பொங்கும் பார்வையில் 

முத்தெடுக்கும் பொழுது.....


பறவைகளும் நிழலைத்தேடி அலைகின்றது 

நான் 

கோடை வெயிலிலும் 

உன் குளிர் பார்வையை தேடி அலைகின்றேன்....

கோடை வெயிலிலும் 

பூத்துக் குலுங்கும் மலரினை போல

உன் அழகினில் பூத்து சிணுங்கி உதிர்ந்து போகின்றேன்.....


நொடிக்கு நொடி மாறும் பருவநிலையைப் போல

உன் குழந்தை பார்வையை உணர்ந்து 

மயங்கி சரிந்து தவழ்ந்து உறைந்து போகின்றேன்....


சுட்டரிக்கும் அனல் காற்றும் 

நிலவாக தெரிய ஆரம்பித்தது

உன்து பார்வையின் தரிசனம் கிடைத்த பிறகு.....


கொடியினில் பூத்து குலுங்கும் 

பூவினை போல உன் பார்வையின் 

ஊடல் தேடலில் மடிந்து புறப்படுகின்றேன்....

கொளுத்தும் வெயிலும் 

குளிர தொடங்கியது.... 

சுடுநீரும் உருகத் தொடங்கியது....

நகரும் நிமிடமும் 

உறங்கத் தொடங்கியது....

தேடும் பார்வையும் 

மறைய தொடங்கியது..... 

மனதினை  தொடும் இதழ்களும் 

இசைக்கத் தொடங்கியது.... 

அவளது இதழ் பனித்துளிக்காக....!