கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. பதட்டம்.. அருகாமை பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை: கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து எல்பிஜி கேஸ் ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி,கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை திரும்ப முயன்றபோது கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் துளை ஏற்பட்டு அதிலிருந்து கேஸ் வெளியேறியது. உடனடியாக பதறிய லாரி ஓட்டுநர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஒரு கிலோமீட்டர் அளவுக்கு வாயு கசிவை கட்டுப்படுத்தும் பணியை துரிதப்படுத்தினர். பின்னர் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 மீட்டர் அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கேஸ் கசிவை கட்டுப்படுத்துவதற்காக துளை விழுந்த டேங்கரை அடைக்கவும், அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணி சுமார் 5 மணி நேரமாக நடைபெற்றது. தொடர்ந்து டேங்கர் லாரி தீ பற்றி எரியாமல் இருக்க தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். பாரத் பெட்ரோலிய தொழில்நுட்ப அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கேஸ் டேங்கரை அகற்றுவது தொடர்பாக ஆய்வு நடத்தினர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய லாரியிலிருந்து கேஸ் கசிவை நிறுத்த ஒரு நிமிடத்தில் வாயு கசிவை நிறுத்தும் வகையில் Resin hardner என்ற வேதிப்பொருள் கொண்டு கசிவு அடைக்கப்பட்டது.
விபத்தில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பிய ஓட்டுநர் ராதா கிருஷ்ணனிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டார். அப்போது டேங்கர் லாரியை திருப்பும்போது முன்பக்கமாக சென்று திருப்பாமல் அப்படியே திரும்பியதால் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் உள்ள சுவரில் மோதி லாரி கவிழ்ந்தது தெரிய வந்தது. மேலும் 37 டன் கொள்ளளவு கொண்ட கேஸ் டேங்கரில் 18 டன் மட்டுமே கேஸ் கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.
விபத்து நடந்த உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை புகை பிடிக்கவோ, தீ பற்ற வைக்கவோ போலீசார் தடை விதித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்