"என்னை சிலுவையில் அறையப் போறாங்க.. காப்பாத்துங்க".. போலீஸிடம் ஓடிய "கென்யா இயேசு"

Baluchamy
Mar 09, 2023,03:03 PM IST
நைரோபி: தன்னை தானே ஜீஸஸ் என சொல்லிக்கொள்ளும் கென்யா நாட்டை சேர்ந்த எலியுட் வகேசா  என்பவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையின் உதவியை நாடியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கான காரணம்தான் சுவாரஸ்யமானது!

கென்யா நாட்டை சேர்ந்தவர் எலியுட். இவரை டோங்கேரன் பகுதி இயேசுநாதர் என்று இவரது ஆதரவாளர்கள் அழைக்கிறார்கள். கென்யாவில் உள்ள பாங்கோமா என்ற பகுதியில் பாதிரியாராக இருந்து வருகிறார்.  "நான் தான் இயேசு கிறிஸ்து" என்று கூறிக் கொள்வது இவரது வழக்கம். இவரது ஆதரவாளர்களும் இவரை "வாழும் இயேசு" என்று கூறி துதி பாடி வருகிறார்கள்.

நான் தான் இயேசு என எலியுட் கூறுவதை 'பாங்கோமா' பகுதியில் உள்ள சிலர் ஏற்றுக்கொண்டாலும், பலர் "இவருக்கு வேற வேலை இல்லையா" என கடுப்பானார்கள்.வந்தனர். நான் தான் இயேசு என ஊர் மக்களில் சிலரை நம்பவைத்த எலியுட்டின் இந்த பொய்யை ஏற்றுக்கொள்ள இவர்களால் முடியவில்லை. இவரை அம்பலப்படுத்த முடிவு செய்தனர்.



இதையடுத்து அவர்கள் எலியுட்டை அணுகி, சரி நீங்க இயேசுவாவே இருந்துட்டுப் போங்க.. ஆனால் உங்களை சிலுவையில் அறைவோம்.. நீங்கள்தான் இயேசுநாதர் என்றால் 3 நாளில் உயிர்த்தெழுந்து வாங்க. ஈஸ்டரின்போது நீங்கள் உயிர்த்தெழுந்து வர வேண்டும். அப்படி நடந்தால் முழுமையாக நம்புகிறோம் என்று கூற டோங்கரேன் அதிர்ச்சியாகி விட்டார். 

ஒரு பொய் சொல்லிட்டு ஜாலியா சுத்துறது குத்தமாய்யா என்று புலம்பிய அவர் இதற்கு மேலும் நம்முடைய கில்லாடித்தனம் இவர்களிடம் வேலைக்கு ஆகாது.. பேசாமல் போலீஸிடம் போய் விட வேண்டியதுதான் என்று போலீஸாரிடம் போய் தஞ்சமடைந்துள்ளார். என்னை சிலுவையில் அறையப் போவதாக மிரட்டுகின்றனர் எனக்கு நீங்கள் தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என போலீசில் புகார் கூறியுள்ளார்.

கென்யாவின் "இயேசுநாதருக்கு" வந்த இந்த சோதனை இப்போது வைரலாகி வருகிறது. "சும்மா ஒரு வார்த்தை சொன்னதுக்கு உடனே டெஸ்ட் பண்ணி பார்த்தா எப்படிப்பா" என்ற வடிவேலுவின் டயலாக் தான் ஞாபகம் வருகிறது..!

இவரது 20 வயதில் தலையில் அடிபட்டதாம். அதன் பிறகுதான் இவர் போதனை செய்ய ஆரம்பித்தாராம். அப்போது முதல் தான் இயேசுநாதர் போலவே வாழ்வதாகவும், தூய கிறிஸ்தவர் என்றும் கூறி வந்துள்ளார். இதையடுத்து இவருக்கு ஆதரவு வட்டம் அதிகரித்தது. ஆனால் தற்போது சர்ச்சைச் சேர்ந்த சிலர் இவருக்கு எதிராக திரும்பியிருப்பதால் சிக்கலில் மாட்டியுள்ளார்.