பிச்சை எடுத்தே கோடீஸ்வரர் ஆனவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Jul 08, 2023,09:53 AM IST
மும்பை : பிச்சைக்காரர்களை நாம் தினசரி வாழ்க்கையில் பார்த்திருப்போம். ஆனால் பிச்சை எடுத்தே கோடீஸ்வரர் ஆன ஒருவர் இருக்கிறார். அதுவும் நம்ம இந்தியாவில் தான். இன்றைய தேதியில் இவர் தான் உலகின் பணக்கார பிச்சைக்காரரும் ஆவார்.
நம்ப முடியலியா.. நம்பித்தான் ஆகணும் பாஸ்.. தொடர்ந்து படிங்க.
பாரத் ஜெயின் என்பவர் தெருக்களில் பிச்சை எடுத்த பணத்தை வைத்தே கோடி கணக்கில் சொத்து சேர்த்துள்ளார். மும்பையை சேர்ந்த இவர், வசதி இல்லாததால் படிக்க முடியாமல் போனவர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு மகன்கள், சகோதரர், தந்தை என குடும்பம் உள்ளது. பாரத் ஜெயினும் அவரது குடும்பமும் மும்பையில் உள்ள அப்பார்மென்ட் ஒன்றில் தான் வசித்து வருகிறார்கள்.
பாரத் ஜெயின் பிள்ளைகள் கான்வென்டில் படித்து, தற்போது படிப்பை முடித்து விட்டனர். பிச்சை எடுப்பதையே தொழிலாக வைத்திருக்கும் பாரத் ஜெயினின் மாத வருமானம் ரூ.75,000 ஆகும். இவருக்கு சொந்தமாக மும்பையில் இரண்டு அப்பார்ட்மென்ட்கள் இருக்கிறதாம். இவற்றின் மதிப்பு தலா ரூ.70 லட்சம்.
ஜெயினின் மொத்த சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி. அப்பார்ட்மென்ட் மட்டுமல்ல தானேவில் இவருக்கு சொந்தமாக இரண்டு கடைகளும் உள்ளன. இவற்றை மாதம் ரூ.30,000 க்கு வாடகைக்கு விட்டுள்ளார். பாரத் ஜெயினை பெரும்பாலம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அல்லது ஆசாத் மைதானத்தில் பார்க்க முடியும்.
இவ்வளவு வசதி வாய்ப்புகள், சொத்து அனைத்தும் சேர்த்து பிறகும் பாரத் ஜெயின் இதுவரை பிச்சை எடுப்பதை நிறுத்தவில்லை. அவரது குடும்பத்தினர் எவ்வளவோ சொல்லியும் தற்போது வரை அவர் பிச்சை எடுத்துக் கொண்டுள்ளார். பல பிச்சைக்காரர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் பிச்சை எடுத்தாலும் சில நூறு ரூபாய்களை கண்ணால் பார்ப்பதே அரிது. ஆனால் பாரத் ஜெயின் தினமும் 10 முதல் 12 மணி நேரம் பிச்சை எடுத்து ரூ.2000 முதல் ரூ.2500 சம்பாதித்து விடுவாராம்.