அண்ணாமலை பாணியில்.. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராவாரா சசிகாந்த் செந்தில்?
Jun 21, 2023,10:12 AM IST
டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிகாந்த் செந்தில் நியமிக்கப்படுவாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தவர் சசிகாந்த் செந்தில். கர்நாடகத்தில் அவர் பணியாற்றியபோது அவருக்கு நல்ல பெயர் இருந்தது. பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸில் அவர் இணைந்தார். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அவரது தலைமையில்தான் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் செயல்பட்டது.
சசிகாந்த் செந்தில் தலைமையிலான வார் ரூம் செயல்பாடுகள்தான் அக்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியத் தேடிக் கொடுத்தது. இந்த நிலையில் தற்போது சசிகாந்த் செந்திலை தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்கப் பயன்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
20224ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடத்தப்படவுள்ளது. ஆனால் முன்கூட்டியே தேர்தல் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்தத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில்தான் அக்கட்சிக்கு அதிக அளவிலான வெற்றிகள் கிடைத்து வருகின்றன - திமுகவின் புண்ணியத்தால். இந்த நிலையில் வருகிற தேர்தலிலும் சிறப்பாக செயல்படவும், காங்கிரஸை பலப்படுத்தவும் சசிகாந்த் செந்திலைப் பயன்படுத்த அது நினைக்கிறது.
கர்நாடகத்தில் எப்படி சிறப்பாக திட்டமிட்டு ஸ்க்டெச் போட்டு செயல்பட்டார்களோ அதேபோல இங்கும் செயல்பட விரும்புகிறார்களாம். அதற்கு முன்பு சசிகாந்த் செந்திலுக்கு நல்லதொரு பதவியைத் தரவும் காங்கிரஸ் மேலிடம் குறிப்பாக ராகுல் காந்தி விரும்புகிறாராம். சசிகாந்த் செந்திலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தி இளம் திறமைகளை மேலே கொண்டு வந்து கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சும் திட்டமும் காங்கிரஸிடம் உள்ளதாம்.
அதேசமயம், சசிகாந்த் செந்தில் வசம் தலைவர் பதவியைக் கொடுக்க சீனியர்கள் சிலர் கடுமையாக ஆட்சேபிக்கிறார்களாம். சசிகாந்த் செந்தில் அரசியலுக்குப் புதியவர். அனுபவம் இல்லாதவர். அவரிடம் போய் பெரிய பொறுப்பை கொடுப்பது சரியாக இருக்காது. காங்கிரஸைப் பொறுத்தவரை பழம் பெரும் தலைவர்கள்தான் அதிகம். அவர்களை நிர்வகிக்க அனுபவம் வாய்ந்த தலைவர் இருக்க வேண்டியது அவசியம் என்று இவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்களாம்.