மர்ம இன்டர்நேஷனல் கால்கள்.. குவியும் புகார்கள்... வாட்ஸ்ஆப் என்ன சொல்கிறது ?
May 10, 2023,04:59 PM IST
புதுடில்லி : கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு அடையாளம் தெரியாத நம்பர்களில் இருந்து இன்டர்நேஷனல் கால்கள் வந்து கொண்டிருப்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக புகார்கள் குவிந்து வருவதை அடுத்து இதற்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் பதிலளித்துள்ளது.
இந்தியாவின் மட்டும் மாதத்தில் இரண்டு பில்லியன் பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வருகின்றனர். மிக அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் தளமாக இருப்பதால் இதை பயன்படுத்தி, மோசடிகளும் அதிகம் நடக்க துவங்கி விட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்திய வாட்ஸ்ஆப் பயனாளர்கள் பலருக்கும் தெரியாத நம்பர்களில் இருந்து வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் கால், வீடியோ கால், மெசேஜ் என வந்து கொண்டிருக்கிறது.
இந்த கால்களை தெரியாமல் அட்டன்ட் செய்து விட்டால் அந்த குறிப்பிட்ட நபரின் போனில் இருக்கும் தகவல்கள் திருடப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தெரியாத எண்கள் மலேசியா, வியட்நாம், எதியோப்பியா என பல நாடுகளின் ஐஎஸ்டி கோடினை பயன்படுத்தி வருகிறது. இவர்கள் யார், எதற்காக இப்படி கால் செய்கிறார்கள், இவர்களின் நோக்கம் என எந்த தகவலும் தெரியவில்லை.
இந்நிலையில் இப்படி தெரியாத நம்பர்களில் இருந்து வரும் சர்வதேச அழைப்புக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பலரும் ட்விட்டரில் புகார் தெரிவிக்க துவங்கினர். தொடர்ந்து அதிக அளவில் புகார்கள் குவிந்ததால் இது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில், வாட்ஸ்ஆப்பில் பயனாளர்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து பாதுகாப்பு முறைகளும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருந்து வாட்ஸ்ஆப் தவறாக பயன்படுத்தப்பட்டு, பலரும் பலவிதமான மோசடிகளில், தவறுகளில் ஈடுபடுகின்றனர். பயனாளர்களை பாதுகாப்பதற்காக மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.
இது போன்று வரும் சந்தேகத்திற்குரிய கால்கள், மெசேஜ்களை உடனடியாக பயனாளர்கள் பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்து விடுங்கள். சர்வதேச நம்பரோ, உள்ளூர் நம்பரோ தெரியாத எண்ணில் இருந்து வந்தால் அதை பிளாக் செய்து விடுங்கள்.
ஆப்பில் உள்ள பிரைவசி கன்ட்ரோல் சேவையை பயன்படுத்தி, தங்களின் தகவல்களை பாதுகாப்பாக வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது போன்று வாட்ஸ்ஆப்பை தவறாக பயன்படுத்தும் கணக்குகள் கண்டறியப்பட்டு மார்ச் மாதத்தில் மட்டும் 4.7 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பிளாக் அன்ட் ரிப்போர்ட், பிரைவசி கன்ட்ரோல், டூ ஸ்டெப் வெரிபிகேஷன் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் உங்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.