அதிமுக.,வில் அடுத்தடுத்து நடக்கும் சந்திப்புக்கள்...கட்சியும் சின்னமும் யாருக்கு?... பரபரப்பாகும் தம
Feb 03, 2023,02:19 PM IST
சென்னை : அதிமுக.,வில் தினம் தினம் நடக்கும் செயல்பாடுகளால் தமிழக அரசியலில், அடுத்து என்ன நடக்கும் என்ன பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதிமுக.,வில் என்ன நடக்கிறது என ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கவனித்து வருகின்றன.
அதிமுக., தற்போது ஓபிஎஸ் அணி - இபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக உள்ளது. கட்சியும், இரட்டை இலை சின்னமும் யாருக்கு என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் என இபிஎஸ் ஒருவரையும், ஓபிஎஸ் ஒருவரையும் வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதனால் யாரை ஆதரிப்பது என தெரியாமல் மக்களும், அதிமுக தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் ஓபிஎஸ், சசிகலாவை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ்-இபிஎஸ் மீண்டும் இணைய வேண்டும் என சசிகலா வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சசிகலா, "அனைவரும் ஒன்றிணையும் நேரம் வந்து விட்டது. திமுக.,வை வீழ்த்த அதிமுக ஒன்றுபட வேண்டிய நேரம் இது" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் டில்லி சென்று திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பை தனித்தனியாக சந்தித்து பேசி உள்ளார். அவரும் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து அதிமுக.,வில் ஒரே அணியாக செயல்பட வேண்டும் என பாஜக தலைமையிடம் விரும்புவதாக இரு தரப்பினரிடமும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் பாஜக தலைமை விருப்பத்தின் பேரில் ஓபிஎஸ் -இபிஎஸ் ஐ சமாதானப்படுத்தி, ஒன்று சேர்ப்பதற்காக அண்ணாமலை தூதுவராக அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசியல் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.
ஒரு பக்கம் கோர்ட்டில் அதிமுகவும், சின்னமும் யாருக்கும் என்ற வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மற்றொரு புறம், ஓபிஎஸ்-இபிஎஸ் ஐ மீண்டும் ஒன்று சேர்த்த பல தரப்பிலும் முயற்சி நடந்து வருகிறது. இதனால் சமாதான முயற்சி வெற்றி பெறுமா? கோர்ட் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும்? என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.