களம் ரெடி.. ரசிகர்களும் வெயிட்டிங்.. இன்று இந்தியா -ஆஸி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்ஸ்!
Jun 07, 2023,01:37 PM IST
லண்டன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தியா இப்போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டி வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி இது மாலை 3 மணி ஆகும்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அஜிங்கியா ரஹானே, சட்டேஸ்வர் புஜாரா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அக்ஸார் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷான், கே.எஸ். பரத், ஜெயதேவ் உனக்தத், முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், முகேஷ் குமார், சர்துள் தாக்கூர், உமேஷ் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆடும் லெவன் யார் என்பது இனிதான் தெரிய வ���ும்.
இந்தப் போட்டி குறித்து முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கும். எனவே இந்தியா இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்த நல்ல வாய்ப்புண்டு. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். இந்த மைதானத்தை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். ஓவல் மைதானத்தில் விளையாடுவதை சுழற்பந்து வீச்சாளர்கள் விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்றும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.