ஒரே மேட்ச்... 4 ரெக்கார்டு... வேற லெவல் சாதனை படைத்த விராத் கோலி

Aadmika
May 19, 2023,12:15 PM IST
டில்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் ஒரே நாளில் நான்கு சாதனைகளை படைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத் மற்றும் பெங்களுரு அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இதில் 62 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் விராத் கோலி. இதில் 12 பவுண்டரிகள், நான்கு சிக்சர்களும் அடங்கும். இது ஐபிஎல் போட்டிகளில் அவர் அடிக்கும் 6வது சதம் ஆகும். இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் இருந்தார். தற்போது விராத் கோலி அதனை சமன் செய்துள்ளார்.



இது தவிர பெங்களூரு அணிக்காக 7500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.  நேற்று அடித்த சதம் மூலம் ஐபிஎல் 2023 சீசனில் 500 ரன்களை கடந்துள்ளார் கோலி. ஐபிஎல் வரலாற்றில் 6 சீசன்களில் 500 ரன்களை கடந்த வீரர் என்ற மைல்கல்லையும் கோலி கடந்துள்ளார். 

டுவென்டி 20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என ரோகித் சர்மாவின் சாதனையையும் விராத் கோலி நேற்று முறியடித்துள்ளார். நேற்று அடித்ததுடன் சேர்த்து விராத் கோலி இதுவரை டுவென்டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஏழு சதங்களை அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது கோலி தான் முதலிடத்தில் உள்ளார்.

டுவென்டி 20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளது. ஒரே நாளில் அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு சாதனையை குவித்து விட்டதால் விராத் கோலியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.