வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏசி சேர் கார் பயணக் கட்டணம் 25% குறைப்பு

Su.tha Arivalagan
Jul 08, 2023,03:02 PM IST
டெல்லி: வந்தேபாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏசி சேர் கார் பெட்டிகளில் பயணிப்பதற்கான பயணக் கட்டணத்தில் 25 சதவீத குறைப்பை அறிவித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.

பயணிகள் அதிகம் வராத ரயில்களில் பயணக் கட்டணத்தைக் குறைக்கலாம் ரயில்வே வாரியம் பரிந்துரைத்திருந்தது. குறிப்பாக வந்தேபாரத் ரயில்களில் பயணிகள் வரத்து அதிகமாக இல்லாத வழிகளில் பயணக்கட்டணத்தைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த கட்டணக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.



ஏசி சேர் கார், எக்சிகியூட்டிவ் வகுப்புகளில் 25 சதவீத பயணக் கட்டணம் குறைக்கப்படும். இது வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட அனைத்து ரயில்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி அடிப்படை டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதம் குறையும்.  அதேசமயம், ரிசர்வேசன் கட்டணம், சூப்பர் பாஸ்ட் துணை கட்டணம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் மாற்றம் இல்லை. அது அப்படியேதான் தொடரும். 

கடந்த ஒரு மாத காலத்தில் எந்தெந்த ரயில்களில் எல்லாம் பயணிகள் வருகை  50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறதோ அந்த ரயில்களில் இந்தக் கட்டணக் குறைப்பு அமல்படுத்தப்படும்.  இந்தக் கட்டணக் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.  அதேசமயம், ஏற்கனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கு குறைக்கப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாதாம்.