நிர்மலா சீதாராமன் மகள் திருமணம்.. "இவ்வளவு சிம்பிளாவா".. குவிந்த வரவேற்பு!

Su.tha Arivalagan
Jun 09, 2023,10:53 AM IST

பெங்களூரு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் திருமணம் மிகவும் எளிமையான முறையில் வீட்டில் வைத்து நடந்தது பலரையும் வியக்க வைத்துள்ளது. பலரது பாராட்டுக்களையும் இந்தத் திருமணம் வாரிக் குவித்துள்ளது.

மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமனின் பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவரது கணவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். நிர்மலா சீதாராமன் கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். அவரது வீடும் பெங்களூரில்தான் உள்ளது.



நிர்மலா சீதாராமன் தம்பதிக்கு ஒரே மகள்தான். அவரது பெயர் பரக்கலா வங்கமாயி. இவருக்கும் பிரதீக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது. பெங்களூரில் உள்ள அவரது  வீட்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. எந்த அரசியல் தலைவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. குடும்பத்தினர் மற்றும் மிகவும் நெருங்கிய  நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பணத்தை வாரியிறைத்து ஆடம்பரமாக நடத்தப்படும் இக்கால திருமணங்களுக்கு முற்றிலும் நேர் மாறாக பிராமண பாரம்பரிய முறையில் இந்தத் திருமணம் நடைபெற்றது.  உடுப்பி அடமரு மடாதிபதிகள் நேரில் வந்து  திருமணத்தை ஆசிர்வதித்தனர்.

மகள் திருமணத்திற்கு நிர்மலா சீதாராமனும் கூட ஆடம்பரமான உடை அணியவில்லை. சாதாரண மொலகல்முரு சேலையைத்தான் கட்டியிருந்தார். அந்த இடத்தில் ஒரு தாயாக மட்டுமே காட்சி அளித்தார். எந்தவிதமான பந்தாவும் இல்லை. 

மிகவும் எளிமையாக நடந்த இந்த திருமணம் பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.