"பொது சிவில் சட்டம்".. ஒரு நாட்டுக்கு எப்படி 2 சட்டம் இருக்க முடியும்..  மோடி கேள்வி

Su.tha Arivalagan
Jun 27, 2023,04:37 PM IST
போபால்: பொது சிவில் சட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். நாடு ஒன்றாக இருக்கும்போது சட்டம் மட்டும் எப்படி இரண்டாக இருக்க முடியும் என்று அவர் வினவியுள்ளார்.

பொது சிவில் சட்டம் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் மிக முக்கியமான ஒரு கொள்கை ஆகும். பாஜக அரசு அதை நோக்கிய இலக்கில்தான் பயணித்தும் வருகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பொது சிவில் சட்டம் குறித்துப் பேசியுள்ளார்.



சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலுக்கு சென்றிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அங்கு பாஜகவினர் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது மோடி பேசியதிலிருந்து சில:

முத்தலாக் என்பது இஸ்லாமிலிருந்து பிரிக்க முடியாது என்று சொன்னால், ஏன் இந்த நடைமுறையை சிரியா, கத்தார், இந்தோனேசியா, எகிப்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பின்பற்றவில்லை, கடைப்பிடிக்கவில்லை.

ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சட்டம் இருக்க முடியுமா, முடியாது இல்லையா. அது போலத்தானே ஒரு நாட்டுக்கு பல சட்டங்கள் இருக்க முடியாது. இரண்டு சட்டங்களால் ஒரு நாட்டை எப்படி ஆளமுடியும். எகிப்து நாட்டு மக்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லீம்கள்தான். அந்த நாடு 80, 90 வருடங்களுக்கு முன்பே முத்தலாக் நடைமுறையை ஒழித்து விட்டது.

முத்தலாக் நடைமுறைக்காக குரல் கொடுப்போர், வாக்கு வங்கி அரசியல் செய்வோர் என்றுதான் அர்த்தம்.  அவர்கள் உண்மையில் முஸ்லீம் பெண்களுக்கும், மகள்களுக்கும் அநீதி இழைக்கிறார்கள். பெண்கள் குறித்துக் கவலைப்படாதது முத்தலாக். குடும்பங்களை அழிக்கவே இது உதவுகிறது. பெருத்த நம்பிக்கையுடன் ஒரு பெண் இன்னொரு குடும்பத்தில் வாழப் போகிறாள். ஆனால் முத்தலாக் சொல்லி அந்தப் பெண்ணை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.  அந்தப் பெண்ணின் நிலை என்னாகும்.. அவரது தந்தை, தாய், சகோதரர்கள் நிலை என்னாகும்.. இதை யாரும் யோசிப்பதில்லை.

இப்படிப்பட்ட அபல நிலைக்குத் தள்ளப்படும் பெண்களுக்காக, மகள்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கவே நான் விரும்புகிறேன் . அதனால்தான் முஸ்லீம் மகள்களும், பெண்களும் பாஜகவை ஆதரிக்க விரும்புகிறார்கள். என்னுடன் துணை நிற்க விரும்புகிறார்கள்.

இந்திய முஸ்லீம்கள் ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் உங்களது உணர்வுகளைத் தூண்டி அதில் அவை குளிர் காய நினைக்கின்றன. அதை அனுமதிக்காதீர்கள்.  நமது அரசியல் சாசனம், அனைத்து மக்களும் சமம் என்று சொல்கிறது. சுப்ரீம் கோர்ட்டே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 

2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் மீண்டும் பாஜகவே வெல்லும். மீண்டும் பாஜகதான் மத்தியில் ஆட்சியமைக்கும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.