பிரதமர் மோடியை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.. ஹிரோஷிமாவில் நாளை பேச்சு

Su.tha Arivalagan
May 19, 2023,04:00 PM IST
ஹிரோஷிமா: பிரதமர் நரேந்திர மோடியை, உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி சந்தித்துப் பேசவுள்ளார்.  உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் மோடியும், ஜெலன்ஸ்கியும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 மாநாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். அதேபோல உக்ரைன் அதிபரும் நாளை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்து ரஷ்யப் போர் குறித்து விவாதிக்கவுள்ளனர்.

ஹிரோஷிமா நகரில் குவாத் உச்சி மாநாடு நடைபெறுகிறது. கூடவே ஜி 7 மாநாடும் நடைபெறவுள்ளது. இதையொட்டி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் இதில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ளார்.



அமெரிக்க அதிபர் பிடன் உள்ளிட்ட உலகத் தலைவர்களை மோடி சந்தித்துப் பேசவுள்ளார். அந்த வகையில் உக்ரைன் அதிபரையும் அவர் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். 

ரஷ்யப் போரை நிறுத்த இந்தியா உதவ வேண்டும் என்று ஏற்கனவே உக்ரைன் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியா, ரஷ்யாவுடனான தனது நட்பைப் பயன்படுத்தி இதில் உதவ வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து  கோரி வருகிறது.  கிழக்கு ஐரோப்பாவில் அமைதி நிலவ இந்தியா தனது பங்களிப்பைசெய்ய வேண்டும் என்றும் உக்ரைன் கோரி வருகிறது.

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் உஸ்பெக்கிஸ்தானில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினும் கலந்து கொண்டனர். அப்போது உக்ரைன் போர் தொடர்பாக அவர்கள் பேசினர் என்பது நினைவிருக்கலாம்.

உக்ரைன் போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதே சரியான வழி என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.