யுகாதி பண்டிகை 2023 : ஏற்றமும், மாற்றமும் தரும் உகாதி
சென்னை : யுகாதி அல்லது உகாதி என அழைக்கப்படும் இந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பல மொழி பேசும் மக்களால், பல பெயர்களில் இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. ஆனாலும் யுகாதி என்றாலே அனைவருக்கும் தெரிவது தெலுங்கு வருடப்பிறப்பு என்பது தான்.
ஆந்திராவில் இது யுகாதி என்ற பெயரிலும், கர்நாடகாவில் உகாதி என்ற பெயரிலும், மகாராஷ்டிராவில் குடி பாட்வா என்ற பெயரிலும், மணிப்பூரில் சாஜிபு நொங்குமா பன்பா என்றும், சிந்து இனமக்கள் இதுனை சேட்டி சந்த் என்றும் கொண்டாடுகிறார்கள். அதே சமயம் இந்து புராணங்களின் படி இது கலியுகம் தோன்றிய நாளாகவும், பிரம்ம தேவர் இந்த நாளில் தான் தனது படைப்பு தொழிலை துவங்கி உலக உயிர்களை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.
யுகா என்ற சொல் வயது என்பதையும், ஆதி என்பது துவக்கத்தையும் குறிக்கிறது. தமிழ் வருடப்பிறப்பே போன்றே யுகாதி பண்டிகையின் போதும் வீடுகளில் வேப்பம்பூ சேர்த்து பச்சடி செய்வது, கோவில்களில் பஞ்சாங்கள் படிப்பது போன்ற வழக்கம் உள்ளது. பொதுவாக பங்குனி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியிலேயே யுகாதி பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு யுகாதி பண்டிகையானது மார்ச் 22 ம் தேதி புதன்கிழமை வருகிறது.
இந்த நாளில் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, இனிப்புக்களையும், வாழ்த்துக்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து இந்நாளை கொண்டாட வேண்டும். வீடுகளில் பூஜை அறையில் ஐந்து அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து, சிவ பெருமானை நினைத்து வழிபட்டால் வாழ்க்கை வளமாக மாறும் என்பது ஐதீகம்.
யுகாதி நாளில் புதிய தொழில்கள், வீடு கட்ட துவங்குவது போன்ற சுப காரியங்களை செய்வார்கள். இந்த நாளில் துவங்கப்படும் நல்ல காரியங்கள் சிறப்பாக, வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். புதிய துவக்கத்திற்கு ஏற்ற மங்கலகரமான நாள் என்பதால் இந்த நாளில் நல்ல நேரம் கூட பார்க்க தேவையில்லை என்பார்கள். இந்த நாளில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடத்தப்படுவது வழக்கம்.