அமித்ஷாவிடம் பேசி சிஎஸ்கே டிக்கெட் வாங்கி தாங்க...உதயநிதி பேச்சால் கலகலத்த சட்டசபை

Aadmika
Apr 12, 2023,09:57 AM IST

சென்னை : அமித்ஷாவிடம் பேசி திமுக எம்எல்ஏ.,க்கள் அனைவருக்கும் சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே போட்டிகளை காண டிக்கெட் வாங்கி தரும் படி அமைச்சர் உதயநிதி பேசி பேச்சால் தமிழக சட்டசபை கலகலப்பானது.


தமிழக சட்டசபையில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பதிலளித்து பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசியல் களத்தையும், கிரிக்கெட் போட்டியை ஒப்பிட்டு பேசினார். தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடனும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உடனும் சிறு வயதில் கிரிக்கெட் விளையாடியதாகவும் தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் தடம் பதிக்க வடக்கில் சில பேர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது ஒரு போதும் பலிக்காது என்றார். 




ஆன்லைன் ரம்மிக்கு தடை, டெல்டா மாவட்டத்தில் அமைய இருந்த சுரங்க பணிகளுக்கு தடை என முதல்வர் சமீபத்தில் இரண்டு சிக்சர்களை விலாசியதாகவும், அவர் பவுலிங் போட்டால் யாராலும் களத்தில் நிற்க முடியாது என புகழ்ந்து பேசினார். அப்போது எழுந்த அதிமுக கொரோடா எஸ்.பி.வேலுமணி, சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகளை காண டிக்கெட்கள் வாங்கித் தருமாறு உதயநிதியிடம் கேட்டார்.


அதற்கு பதிலளித்த உதயநிதி, நான்கு ஆண்டுகளாக சென்னையில் ஐபிஎல் போட்டிகளே நடக்கவில்லை. நீங்கள் யாருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தீர்கள்? நான் அமைச்சரான பிறகு தான் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்துள்ளேன். என்னுடைய சொந்த செலவில் 150 தமிழக கிரிக்கெட் வீரர்களை அழைத்துச் சென்று, கிரிக்கெட் போட்டிகளை காண வைக்கிறேன். 


டிக்கெட் வேண்டும் என எங்களிடம் கேட்கிறீர்கள். ஐபிஎல் போட்டிகளை நடத்துவது பிசிசிஐ தான். அதன் தலைவர் உங்கள் நெருங்கிய நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா தான். அவர் நாங்கள் சொன்னால் கேட்க மாட்டார். நீங்கள் சொன்னால் கேட்பார். அதனால் நீங்கள் பேசி திமுக உறுப்பினர்களுக்கு 5 டிக்கெட்கள் வாங்கிக் கொடுத்தால் கூட போதும். அதற்கு பணம் கொடுத்து விடுகிறோம். இல்லாவிட்டால் அதையும் வேறு கணக்கில் சேர்த்து விடுவீர்கள் என்றார். இதனால் சட்டசபையே கலகலப்பானது.