சீனாவுக்குப் போகாதீங்க.. பிடிச்சு உள்ளே போட்ருவாங்க.. அமெரிக்கா எச்சரிக்கை

Su.tha Arivalagan
Jul 04, 2023,09:41 AM IST

வாஷிங்டன்: சீனாவுக்குச் செல்லும் அமெரிக்கர்கள், சட்டவிரோதமாக கைது செய்யப்படக் கூடும் என்ற சூழல் இருப்பதால் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

சீனாவுக்குச் செல்வதை அமெரிக்கர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க  வெளியுறவுத்துறை விடுத்துள்ள சுற்றுலா அட்வைசரி தகவல் தெரிவிக்கிறது. சமீபத்தில் இதேபோன்றதொரு சுற்றுலா வழிகாட்டுதலை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 



இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், சட்டவிரோதா கைதுகளில் தொடர்ந்து சீன அரசு ஈடுபட்டு வருகிறது. எனவே சீனாவுக்குச் செல்லும் முடிவை அமெரிக்கர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளோம். அமெரிக்கர்களை குறி வைத்து சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார் அவர்.

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவில் சமீப காலமாக தொடர்ந்து விரிசல் பெரிதாகிக் கொண்டே போகிறது.  சீனா பறக்க விட்ட மர்ம பலூன்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம். அவற்றை அமெரிக்க விமானப்படை சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சட்ட விரோத கைதுகளில் சீனா  ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.