30 டிகிரி வெயிலுக்கே சுருண்டு விழுந்த ராணுவ வீரர்கள்.. லண்டனில்!
Jun 11, 2023,10:54 AM IST
லண்டன்: லண்டனில் நடந்த மன்னர் சார்லஸின் பிறந்த நாள் விழாவையொட்டிய ராணுவ அணிவகுப்பு மரியாதை ஒத்திகையின்போது 3 வீரர்கள் வெயில் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர்.
இங்கிலாந்தில் தற்போது கடும் வெயில் காலம். வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் மன்னரின் பிறந்த நாளையொட்டி ஜூன் 17ம் தேதி ராணுவ அணிவகுப்பு மரியாதை நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதி ரிகர்சல் என்பதால் இளவரசர் வில்லியமும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அப்போது அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்ட 3 வீரர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். கடும் வெயில் காரணமாக 3 பேரும் மயங்கி விழுந்தனர். 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கு லண்டனில் அப்போது வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. (சென்னையில் 42 டிகிரியைத் தாண்டி வெயில் போய்க் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்).
மயங்கி விழுந்த வீரர்களை ஸ்டிரெச்சரில் வைத்து கொண்டு சென்று சிகிச்சை அளித்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.
இதுதொடர்பாக டிவீட் போட்டிருந்த இளவரசர் வில்லியம், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அணிவகுப்பு ஒத்திகையில் கலந்து கொண்ட ஒவ்வொரு வீரருக்கும் பெரிய நன்றி. மிகவும் கடினமான சூழலிலும் கூட சிறப்பாக அணிவகுப்பு மரியாதை நடந்தது. அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் வில்லியம்.
இதற்கிடையே, தெற்கு இங்கிலாந்தில் கடும் வெயில் நிலவி வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
ஜூன் 17ம் தேதி நடைபெறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ் கலந்து கொண்டு அதைப் பார்வையிடுவார்.