"அமெரிக்காவும் இந்தியாவும்"..  மோடிக்கு பைடன் கொடுத்த சூப்பர் "டி" சர்ட்!

Su.tha Arivalagan
Jun 24, 2023,09:35 AM IST
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு அருமையான டி சர்ட்டை பரிசாக அளித்துள்ளார். அவரது அமெரிக்க பயணத்தையொட்டி இந்த டி சர்ட்டை ஜோ பைடன் பரிசாக அளித்துள்ளார்.

அந்த டி சர்ட்டில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம்தான் சிறப்பானது. அதில், "The future is AI - America & India" என்று எழுதப்பட்டிருந்தது. 



மோடியின் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள், தலைவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது. அதில் அதிபர் பைடன், மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த சந்திப்பின்போது பைடன், மோடிக்கு ஒரு டி சர்ட் பரிசளித்தார்.  அந்த டி சர்ட்டில்தான் மேற்சொன்ன வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

செயற்கை நுண்ணறிவு என்ற அர்த்தமும், அமெரிக்கா இந்தியா என்ற அர்த்தமும் வரும் வகையில் அந்த வாசகம் உருவாக்கப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது. குறிப்பாக மோடிக்கே கூட அந்த வாசகம் மிகவும் பிடித்துப் போய்விட்டது.

இதுகுறித்து மோடி கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக ஏஐ தொழில்நுட்பத்தில் மாபெரும் மாற்றங்கள் வந்து விட்டன. அதே நேரம், இன்னொரு "ஏஐ" அதாவது அமெரிக்கா இந்தியாவின் உறவிலும் கூட நிறைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறியபோது கைத்தட்டல் அரங்கைப் பிளந்தது.

இந்தக் கூட்டத்தில் மைக்ரோசாப்ட் தலைமை செயலதிகாரி சத்யா நாடெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மகிந்திரா குழும தலைவர் ஆனந்த் மகிந்திரா உள்ளிட்டோரும் இந்தியாவின் சார்பில் பங்கேற்றனர்.