தமிழகத்தில் 50,000 தான்...உ.பி.,யில் 4 லட்சமாம்...பொது தேர்விற்கே 'ஜூட்' விட்ட மாணவர்கள்

Aadmika
Mar 14, 2023,04:16 PM IST

லக்னோ : தேர்வு துவங்கிய முதல் நாளே ப்ளஸ் 2 தேர்வினை தமிழகத்தில் 50,000 மாணவ, மாணவிகள் தவிர்த்துள்ளதாக தகவல் வந்தது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தையே மிஞ்சும் அளவிற்கு உ.பி.,யில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வை தவிர்த்துள்ளனர்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கின. தேர்வு துவங்கிய முதல் நாளே 50,674 மாணவ, மாணவிகள் தேர்விற்கு வராமல் ஆப்சென்ட் ஆகி உள்ளதாக தமிழக பள்ளி, கல்வித்துறை தகவல் வெளியிட்டிருந்தது. பொதுத் தேர்வையே மாணவர்கள் தவிர்த்துள்ளனர்...அதுவும் 50,000 க்கும் அதிகமானவர்களா என பலரும் இங்கு ஆச்சரியப்பட்டு, அதிர்ச்சி தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.




ஆனால் வட மாநிலத்தவர்கள், இதெல்லாம் ஒரு விஷயமா? எங்க ஊர்வல வந்து பாருங்க 4 லட்சம் பேர் தேர்வு எழுதாமல் ஜூட் விட்டுள்ளனர் என சொல்லி ஒட்டு மொத்த இந்தியாவிற்கே ஷாக் கொடுத்துள்ளனர். உத்திர பிரதோ மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த வாரம் வியாழக்கிழமை துவங்கியது. இதில் முதல் நாள் தேர்வினை 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தவிர்த்துள்ளனர்.


தமிழக மாணவர்கள் முதல் தேர்வான தமிழ் தேர்வை தவிர்த்தது போல், உ.பி.,யில் உள்ள மாணவர்கள் முதல் தேர்வான இந்தி தேர்வை எழுதாமல் தவிர்த்துள்ளனர். 2020 ம் ஆண்டு கோவிட் காரணமாக 2021 ம் ஆண்டில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு முன் நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளின் போது முதல் நாள் தேர்வினை 2.4 லட்சம் பேர் எழுதாமல் தவிர்த்துள்ளனர். 2022 ம் ஆண்டில் 4.1 லட்சம் முதல் நாள் தேர்வை தவிர்த்துள்ளனர்.


பத்தாம் வகுப்பு தேர்வில் 9 பேர் ஆள்மாறாட்டம் செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது உ.பி., தேர்வுத்துறை செயலாளர் திவ்யகாந்த் சுக்லா வழக்குப்பதிவு செய்துள்ளார். தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிக்க முடியாத வகையில் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டதே இவ்வளவு அதிகமான மாணவர்கள் தேர்வினை தவிர்த்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.