லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பு .. தமிழ்நாட்டில் யார்..  இந்தியாவில் யார் டாப்?

sahana
Jul 05, 2023,10:45 AM IST
டெல்லி: தற்போதைய நிலையில் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் கட்சிகள் பெறும் ஓட்டுகள் குறித்து டைம்ஸ்நவ் ஆங்கில செய்தி சேனல் நடத்திய கருத்துக்கணிப்பில் பா.ஜ.க., கூட்டணி 325 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 149 இடங்களும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டில் லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பலமான பா.ஜ.க.,வை எதிர்க்க, காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், திமுக, போன்ற 15 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க ‘பிளான்’ போட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பா.ஜ.க.,வை தோற்கடிக்க முடியும் என ஆயத்தமாகி வருகின்றன. அதன் முன்னேற்பாடாக பாட்னாவில் கூட்டமும் கூட்டி விவாதித்தனர்.



இந்த நிலையில், தற்போது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பாக டைம்ஸ்நவ் ஆங்கில செய்தி சேனல் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 22ம் தேதி முதல் ஜூன் 15 வரை ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் சுமார் 250 பேர் என கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் திமுகதான் டாப்

கருத்துக்கணிப்பு படி, 39 லோக்சபா தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 26 முதல் 32 இடங்கள் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக மட்டும் 18 முதல் 22 இடங்களில் வெற்றிப்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதிமுக - பா.ஜ.க., கூட்டணி 5–9 இடங்கள் வெற்றிப்பெறும் என்றும், மற்றவை 2–4 இடங்கள் கைப்பற்றும் எனவும் கருத்துக்கணிப்பு கூறுகிறது. 



சரி, மற்ற மாநிலங்களை பார்க்கலாம்...

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 லோக்சபா இடங்களில், பா.ஜ.க., கூட்டணி 20–22 இடங்களும், காங்கிரஸ் கூட்டணி 3–5 இடங்களும் கைப்பற்றும். மத்திய பிரதேசத்தில் உள்ள 29 லோக்சபா தொகுதிகளில் பா.ஜ.க., 22–24, காங்கிரஸ் 5–7 இடங்களில் வெற்றிப்பெறும். சத்தீஸ்கரில் 11 தொகுதிகளில் பா.ஜ.க., 6–8 இடங்கள், காங்கிரஸ் 3–5 இடங்கள் வெற்றிப்பெறும். பீகாரில் 40 தொகுதிகளில் பா.ஜ.க., 22–24 இடங்கள், நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி 16–18 இடங்கள் கைப்பற்றும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜ.க., 10–12, காங்கிரஸ் கூட்டணி 2–4 தொகுதிகளில் வெற்றிப்பெறும். மேற்குவங்கத்தில் 42 இடங்களில் திரிணமுல் காங்கிரஸ் 20–22 இடங்களிலும், பா.ஜ.க., 18–20 இடங்களிலும், மா.கம்யூ., 1–2 இடங்களிலும், காங்கிரஸ் 1–2 இடங்களிலும் வெற்றிப்பெறும். 

டெல்லியில் பாஜக

டெல்லியில் மொத்தமுள்ள 7 லோக்சபா தொகுதிகள் அனைத்திலும் பா.ஜ.க., வெல்லும் அல்லது ஆம்ஆத்மி ஒரு தொகுதியில் மட்டும் வெற்றிப்பெறும். 25 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அனைத்திலும் வெற்றிப்பெறும் அல்லது தெலுங்கு தேசம் கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றிப்பெறும்.



கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜ.க., 15–17, காங்கிரஸ் 10–12, மதசார்பற்ற ஜனதா தளம் 1–2 தொகுதிகள் கைப்பற்றும். ஒடிசா 21 தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் 12–14 இடங்களிலும், பா.ஜ.க., 6–8 இடங்களிலும், காங்கிரஸ் 0–1 இடங்களிலும் வெற்றிப்பெறும். தெலுங்கானா மாநிலத்தில் 17 இடங்களில் பாரத் ராஷ்ட்ரிய சமிதி 9–11 இடங்கள், பா.ஜ.க., 3–5 இடங்கள், காங்கிரஸ் 2–3 இடங்கள் கைப்பற்றும். 

48 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க., 22–28 இடங்களும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் சிவசேனா அணி இணைந்த ‘மஹா விகாஸ் அகாதி’ கூட்டணி 18–22 இடங்களும் கைப்பற்றும். கோவாவில் உள்ள 2 தொகுதிகளையும் பா.ஜ.க., கைப்பற்றும். குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க., கைப்பற்றும்.

பா.ஜ.க., - 325

ஒட்டுமொத்தமாக லோக்சபா தேர்தலில் பா.ஜ.க., கூட்டணி 285–325 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 111–149 தொகுதிகளிலும், திரிணமுல் காங்கிரஸ் 20–22 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 24–25 தொகுதிகளிலும், பிஜூ ஜனதா தளம் 12–14 தொகுதிகளிலும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி 9–11 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி கட்சி 4–7 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 4–8 தொகுதிகளிலும், மற்றவை 18–38 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இதில், பா.ஜ.க., கூட்டணி 38.08 சதவீதமும், காங்கிரஸ் 28.82 சதவீதமும், மற்றவை 33.10 சதவீதமும் பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவரும்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பா.ஜ.க., கூட்டணியை தவிர மற்ற கட்சிகள் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருக்கும் நிலையில், மற்ற கட்சிகள் 2 முதல் 4 இடங்களில் வெற்றிப்பெறும் எனக் கூறுவது எந்த அளவிற்கு ஏற்புடையது என்பது தெரியவில்லை.