சாதனைப் பெண்கள்: 13 வயதில் சிலம்பம் எடுத்து.. 29 வயதில் புகழ் விண்ணைத் தொட்ட சந்தன மாரி!

Su.tha Arivalagan
Jul 03, 2023,09:41 AM IST
- காயத்ரி கிருஷாந்த்

சென்னை: திறமைக்கு திறவுகோல்  நம் நம்பிக்கைதான்.. வெற்றி பெற மனிதர்கள் தேவையில்லை.. மனம் இருந்தால் போதும் என்று தனது 13 வயதில் மனதில் இருந்த சிலம்ப  ஆசைக்கு சிறகு கொடுத்து வானை தொட்ட இவரும் ஒரு பீனிக்ஸ் தான்.

சந்தன மாரி.. 29 வயது.. 2 குழந்தைகளுக்குத் தாய்.. ஆனால் இவர் செய்த, செய்துள்ள சாதனைகளை பட்டியல் போட்டால்.. கேட்ட அடுத்த நொடியே உங்களது வாய் தானாக ஒரு பெரிய "வாவ்"போடும். இன்றைய இளம் பெண்களுக்கு மிகச் சிறந்த ரோல் மாடல் என்று தாராளமாக சந்தன மாரியை சுட்டிக் காட்���லாம்.

மனசு நிறைய தன்னம்பிக்கை.. தைரியம், துணிச்சல், செஞ்சுதான் பார்ப்போமே.. என்ற வேகம்.. சாதனை தாகம் அடங்காத வேள்வித் தீயாக இருக்கிறார் சந்தன மாரி.  சிலம்பாட்டத்தில் சாதாரண வீராங்கனையாக தொடங்கி இன்று பயிற்சியாளராக உருவெடுத்து நிற்கும் சந்தன மாரி, சாதாரணமாக இந்த இடத்தை அடைந்து விடவில்லை.. கடுமையாக போராடியுள்ளார், வலிந்து போய் ஒவ்வொரு சவாலையும் சந்தித்து உடைத்து எடுத்து விட்டுத்தான்.. உச்சத்தைத் தொட்டிருக்கிறார்.



நம்மால் முடியும் என்று தன் சிலம்ப ஆசையை தொடங்க நினைக்கும் போதே தன் கனவுக்கு அனைவரும் முட்டுக்கட்டை போட்டாலும் தன்னம்பிக்கைக்கு மட்டுமே இடம் கொடுத்து தளராமல் மனதை ஒருங்கிணைத்தார். 15 வயதில் சிலம்பம் கற்க முயன்றபோது, "வயசுக்கு வந்த பொண்ணுக்கு இது எதுக்கு" என்று ஒடுக்கப்பட்டார் . பெண் என்பவள் உடல் ரீதியாக பலவீனமானவள் என்று சொல்லியே ஒதுக்க தொடங்கி பெண்கள் தங்களை தாங்களே குறைத்து எடை போட ஆரம்பித்து விட்டனர். ஆனால் அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் ஆணோ பெண்ணோ மனதில்  வலிமை இருந்தால் வானைத் தொடும் வலிமை வரும் என்று முன்னே வந்த தடையை எதிர்த்து முன்னேறி இருக்கிறார் சந்தன மாரி. 

சமூக ரீதியாகவும் ஒதுக்கப்பட்டு, குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் பலமானவர்கள், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சமூக பழமைவாதத்தை உதறித் தள்ளி, சமூக எதிர்ப்புகள��யும் தவிடு பொடியாக்கி, கடவுள் உருவாக்கிய அனைத்து படைப்புகளும் ஒன்றே..  திறமையும் ஒன்றே என்று தனித் திறமைக்கு சான்றாக நம் முன் இவர்.

தனது 19 வயதில் தன் திறமையை வெளிப்படுத்த கடவுள் கொடுத்த வாய்ப்பை  செம்மையாக பயன்படுத்தி சிலம்பக் கலையை தெளிவாக கற்றுக் கொண்டார். தன்னைப்போல் ஆர்வம் கொண்ட குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்தார். ஒரு பக்கம் உதாசீனங்கள், கேலி கிண்டல்கள் முற்றுகையிட்டு முட்டுக்கட்டை போடத் துடித்தாலும்.. மறுபக்கம் அதையெல்லாம் புறங்கையால் உதறித் தள்ளிக் கொண்டே சிலம்ப கலையை  மூச்சாக நினைத்து நடை போட்டார். அவரின் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசாக அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர் செல்வராஜ் ஆசான் அவர்களிடம் மேலும் சிலம்பு பயிற்சி பெற்று தன் திறமையை மெருகேற்றிக் கொண்டார். செல்வராஜ் அவரது மனைவி ஐரின் செல்வராஜ் ஆகியோரை தனது முன்மாதிரியாக மனதில் நிறுத்தி, இன்று வெற்றிக் கனியை சுவைத்து வீரப் பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.

இவரின் திறமைக்கு கிடைத்த பரிசாக திருநெல்வேலி மாவட்ட சிலம்பு கழகத் துணைச் செயலாளர்  பதவியும், திருநெல்வேலி அமெச்சூர்  சிலம்பக் கழக இணைச் செயலாளர் என்ற அங்கீகாரமும் கிடைத்துள்ளது. 

முதலமைச்சர் கோப்பை சிலம்பாட்டப் போட்டியில் முதன்மைப் பயிற்சியாளராக, 21 போட்டியாளர்களுடன் களத்தில் இறங்கி பதக்கங்களை வாரிக் குவித்துள்ளார்.



பெண்ணென்ற அடையாளத்திற்குள் அடங்கிப் போகாமல் "ஏன்".. " ஏன் என்னால் முடியாது".. "எனக்கு ஏன் மறுக்கப்படுகிறது".. போன்ற கேள்விகளுக்கு உயிர் கொடுத்தால், திறமை என்ற குழந்தை விருட்சமாக மாறும்.  அதைத்தான் செய்து முடித்துள்ளார் சந்தன மாரி. 

ஆணோ, பெண்ணோ.. திறமைகளைப் பொறுத்தவரை எல்லோருமே சமம்தான்.. பெண் என்ற அறுதப்பழசான வாதத்தை தூக்கித் தூரப் போட்டு விட்டு அகன்ற மனதுடன்.. அனைவரையும் பார்க்கும்போதுதான் ஆங்காங்கே புதைந்து கிடக்கும்..."சந்தன மாரி"களை கண்டெடுக்க முடியும்.

திறமைக்கு கை கொடுப்போம்..திறமையாளர்களு���்கு வழி கொடுப்போம்..  சுதந்திரம் என்பது நாமே நமக்கு கொடுப்பது … பெண் அடிமையை பெண் நினைத்தால் மட்டுமே அழிக்க முடியும் … அதற்குத் தேவை தைரியமும், விடா முயற்சியும், சாதிக்கும் தாகமும்.. பிறகென்ன வெற்றி நிச்சயம்…!

இளம் பெண்களுக்கு சிறந்த ரோல் மாடலாக திகழும் சந்தனமாரிக்கு.. தென்தமிழ் இணையதளத்தின் முத்தான வாழ்த்துகள்!