சனிக்கிழமையில் வரும் தை அமாவாசை : தவறாமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

Aadmika
Jan 20, 2023,12:07 PM IST
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் வரும் ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியன மிகவும் முக்கியமானதாகும். வருடம் முழுவதும் அமாவாசை விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த 3 அமாவாசைகள் தவறாமல் விரதம் இருந்து, முன்னோர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு அவர்கள் இறந்த பிறகும் பிள்ளைகள் செய்யும் கடமை அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது. இதனாலேயே இதை பிதுர் கடன் என்கிறோம்.



அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நமது வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, வளர்ச்சி, மகிழ்ச்சி, மன நிம்மதியை தந்து, குடும்பத்தில் அமைதியை தரக் கூடியது. 2023 ம் ஆண்டில் தை அமாவாசை ஜனவரி 21 ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அமாவாசை நாளில் ராகு காலம், எம கண்டம் தவிர்த்து மற்ற நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். இந்த ஆண்டு பூரண அமாவாசையாக நாள் முழுவதும் அமாவாசை திதி நீடிப்பதால், காலை 6 மணிக்கு மேல் பகல் பொழுதிற்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து, படையல் போட்டு விட வேண்டும்.

தை அமாவாசையன்று செய்ய வேண்டிய 5 விஷயங்கள் :

* காலையில் எழுந்து குளித்து விட்டு முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இறைக்க வேண்டும். கோவில்கள், நீர் நிலைகளில் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் எள்ளும் தண்ணீரும் இறைத்து, கால் படாத இடத்தில் அந்த தண்ணீரை ஊற்றி விட வேண்டும்.

* முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். கடல் இருக்கும் தலங்கள், கூடுதுறைகள், நதிகள் அல்லது குளக்கரையில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. தர்ப்பணம் முடித்த பிறகே தெய்வத்திற்கு செய்ய வேண்டிய  பூஜைகளை செய்ய வேண்டும்.

* பகல் பொழுதில் இறந்த முன்னோர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை சமைத்து இலை போட்டு படையல் இட வேண்டும். தர்ப்பணம் கொடுத்தவர்கள் காலை முதல் உபவாசம் இருந்து, பகல் பொழுதில் படையல் போட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

* வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்கு முன் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு படைக்க வேண்டும். குறைந்தது இரண்டு பேருக்காவது அமாவாசை நாளில் அன்ன தானம் செய்ய வேண்டும்.

* பகல் பொழுதுடன் அமாவாசை விரதத்தை முடித்து விடாமல், மாலையில் வீட்டில் விளக்கேற்றி நமது முன்னோர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள், நமது தலைமுறையினர் நன்றாகவும், ஒளிமயமான வாழ்க்கை வாழவும் மகாவிஷ்ணுவிடம் வழிபட வேண்டும்.