"கொளுத்தும் வெயில்".. என்ன இப்பவே பயங்கரமா இருக்கா.. இனிதான் டெரரா இருக்குமாம்!
Mar 01, 2023,01:29 PM IST
புதுடில்லி : இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் மிக கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது. இனி இன்னும் பயங்கரமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் பீதியை கிளப்பி உள்ளது.
பிப்ரவரி மாத நிறைவடைந்து விட்டதால் அந்த மாதத்தில் பதிவான வெப்ப நிலை பற்றிய தகவலை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு, கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே துவங்கி விடும். மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வழக்கத்தை விட இந்த ஆண்டு பனிப்பொழிவு, இரவு நேரங்களில் கடும் குளிர் இருந்து வந்தது. அப்போதே இந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என மக்கள் பேச துவங்கி விட்டனர். ஆனால் மக்கள் நினைத்ததை விட இந்த ஆண்டு கோடை காலம் மிக கொடுமையாக இருக்கும் என இந்திய வானிலை மையமே கூறி இருப்பதால் வியாபாரிகள், வெளியில் சென்று வேலை செய்பவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பீதி அடைந்துள்ளனர்.