"என்னாது இந்த கிரவுண்டில விளையாடனுமா".. அப்செட்டான பாகிஸ்தான்!

Su.tha Arivalagan
Jun 19, 2023,04:34 PM IST

கராச்சி: 2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் இடங்கள் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


2023 ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இப்போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்பது தொடர்பாக அந்த அணி நிர்வாகத்தில் குழப்பம் நிலவி வந்தது.




பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியா கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டதால் உலகக் கோப்பைப் போட்டித் தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் ஐசிசியுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பாகிஸ்தான் இந்தியா வர சம்மதித்தது.


இந்தியாவில் அகமதாபாத், சென்னை, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் சில போட்டிகள் குறித்து பாகிஸ்தான் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாம்.


இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15ம்தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் விரும்பவில்லையாம்.  அதாவது மோடி மைதானத்தில் போட்டி நடைபெறுவதை அது விரும்பவில்லையாம். இதே மைதானத்தில்தான் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.


இதேபோல சென்னையில் ஆப்கானிஸ்தானுடனும், பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுடனும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதையும் பாகிஸ்தான் விரும்பவில்லையாம். சென்னை ஸ்பின் பவுலிங்குக்குப் பெயர் போனது. எனவே ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள ரஷீத் கான், நூர் அகமது போன்ற பிரபல ஸ்பின்னர்களிடம் சிக்கி விடக் கூடாது என்று பாகிஸ்தான் யோசிக்கிறதாம். 


அதேபோல பெங்களூரு மைதானம் பேட்டிங்குக்குப் பெயர் போனது. எனவே ஆஸ்திரேலியா நம்மை  வச்சு செய்து விடும் என்று பாகிஸ்தான் அஞ்சுகிறதாம். எனவே ஆஸ்திரேலியாவுடனான போட்டியை சென்னையிலும், ஆப்கானிஸ்தான் போட்டியை பெங்களூருவுக்கும் மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் கருதுகிறதாம்.


ஆனால் மைதானங்கள் மாற்றப்பட வாய்ப்பில்லை என்றே ஐசிசி தரப்பிலும், பிசிசிஐ தரப்பிலும் கூறப்படுகிறது. காரணம், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு அணி மைதானத்தை மாற்றக் கோரினால் அது நியாயமானது. ஆனால் தங்களது பலம், பலவீனங்களுக்கேற்ப மைதானத்தை மாற்றக் கோரினால் அதற்கு வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.