தெலங்கானா சட்டசபை திறப்புக்கு என்னை கூப்பிடலையே.. தமிழிசை ஆதங்கம்
May 25, 2023,12:46 PM IST
சென்னை: தெலங்கானாவில் பிரமாண்டமாக சட்டசபை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு எனக்கு அழைப்பு கூட விடுக்கப்படவில்லை என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வைத்துத்தான் புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.
குடியரசுத் தலைவர் அழைக்கப்படாத பட்சத்தில் விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக கூட்டறிக்கையும் விடுத்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஆளுநர் மாளிகையில் ஒரு பிரஸ் மீட் நடந்தது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்தி அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தமிழிசை செளந்தரராஜன் பதிலளிக்கையில், மிக சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக பெரிய (தெலங்கானா) சட்டசபை திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் (கேசிஆர்) திறந்து வைத்தார். எல்லோரும் கேட்டார்கள். கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்று. இல்லை முதல்வர்தான் ஆட்சி செய்கிறார் என்று சொன்னார்கள். ஆரம்பித்து வைப்பதற்கு கூட இல்லை, அழைப்பு கூட விடுக்கப்படவில்லை.