ஆவின் நிறுவனத்தில் சிறார் தொழிலாளர்களா.. டிடிவி தினகரன் கண்டனம்

Su.tha Arivalagan
Jun 06, 2023,03:26 PM IST
சென்னை: சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பொருட்கள் தயாரிப்புப் பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக சிறார்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செயல் அதிர்ச்சி அளிப்பதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு பண்ணையில் ஒப்பந்தப் பணியாளர்களாக 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.



தங்களை ஒப்பந்தம் மூலம் ஆவினில் பணியமர்த்திய நிறுவனம் முறையான சம்பளம் வழங்கவில்லை என சிறார்கள் ஆவின் பண்ணை முன்பு கொளுத்தும் வெயிலில் போராட்டம் நடத்தியதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தொழிலாளர் சட்டத்தை மீறி இரண்டு மாதமாக ஐஸ்க்ரீம் தயாரிப்பு பிரிவில் பேக்கேஜிங் (PACKAGING) பணியில் சிறார்களை ஒப்பந்த நிறுவனம் மூலம் ஆவின் நிறுவனம் பணியில் ஈடுபடுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல ஆவின் நிறுவனத்துக்கும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கப்படுவதுடன், இதனை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

மேலும், சிறார்களுக்கு உரிய சம்பளம் வழங்க உத்தரவிடுவதுடன், அவர்கள் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார் தினகரன்.