ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் ஆரம்பிக்கலாமே... டிஆர்பி ராஜா உற்சாகம்.. Why not?
May 18, 2023,03:49 PM IST
சென்னை: கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் லீக் இருக்கணுமா.. ஜல்லிக்கட்டுக்கும் ஆரம்பிக்கலாமே என்று சூப்பரான ஐடியா கொடுத்துள்ளார் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிடைத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு ஆளாளுக்கு உரிமை கொண்டாடும் வேலை மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுக தான்தான் சட்டம் கொண்டு வந்தது, எனவே எங்களுக்கே இது பெருமையானது என்று கூறுகிறது. சட்டம் கொண்டு வந்தது அதிமுகவாக இருந்தாலும் மத்தியஅரசுதானே அதற்கு பல உதவிகளைச் செய்தது எனவே பாஜகவுக்கே அந்தப் பெருமை என்று அண்ணாமலை அடித்துச் சொல்கிறார்.
இதெல்லாம் சரி, சுப்ரீம் கோர்ட்டில் நல்ல வக்கீல்களை வைத்து வாதாடியது யார்.. நாங்கதானே.. அப்ப எங்களுக்குத்தானே அந்தப் பெருமை என்று திமுகவும் தன் பங்கைக் கோருகிறது. ஆனால் இந்த சட்டம் வந்தபோது முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் அமைதியாக இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இதுகுறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், ஜல்லிக்கட்டுத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களான கபில்சிபல், ராகேஷ் திரிவேதி, முகுல் ரோகத்கி ஆகியோரை அமர்த்தி, தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களை வலிமையான வாதங்களாக எடுத்துரைக்கச் செய்ததன் விளைவாக, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது மாண்பமை உச்சநீதிமன்றம் !
2017 ஜனவரியில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தைத் தொடங்கிய நம் திராவிட நாயகர், அதற்கான சட்டப் போராட்டத்திலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக, சளைக்காமல் ஈடுபட்டு இந்த மகத்தான வெற்றிக்கு வித்திட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் இதுவரை ஜல்லிக்கட்டு நடைபெறாத மாவட்டங்களிலும் சிறப்பான முறையில் அதனை நடத்தி வருகிறது திராவிட_மாடல் அரசு. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினால் தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமை மீட்கப்பட்டு,இனி உலகளாவிய கவன ஈர்ப்புடன் தமிழ்நாடெங்கும் ஜல்லிக்கட்டு சிறக்கும். திராவிட நாயகரான முதலமைச்ச��ின் பெயர் உரக்க ஒலிக்கும். கிரிக்கெட்டுக்கு மட்டும் தான் லீக் இருக்க வேண்டுமா! ஜல்லிக்கட்டு பிரீமியர் லீக் ஆரம்பிக்கலாமே என்று கூறி ஐடியாவையும் அதில் இணைத்துள்ளார் டிஆர்பி ராஜா.