தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. மின் கட்டணம் உயராது!
Jun 09, 2023,12:45 PM IST
சென்னை : தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் உயர்த்தப்படாது. அதே சமயம் ஜூலை 1 ம் தேதி முதல் மற்ற பிரிவுகளுக்கான மின் கட்டணம் 2.18 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகவும், யூனிட்டிற்கு 8 ஆக இருந்த கட்டணம் 8.17 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால் 100 யூனிட்டுக்கு கட்டணம் செலுத்தியவர்கள் இனி 100 யூனிட் உபயோகத்திற்கு 102 யூனிட்டிற்கான கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த கட்டண உயர்வு தான் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது இந்த 2.28 சதவீதம் மின் கட்டணம் உயர்வு என்பது வீட்டு உபயோகம் அல்லாத மற்ற பிரிவுகள் மற்றும் உயர் மின்சக்தி கொண்ட இணைப்புக்களுக்கு மட்டும் தான். வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் உயராது என மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீட்டு உபயோகத்திற்கான மின் கட்டணம் முதல் 100 யூனிட்களுக்கு இலவசம் என்றும், இரண்டாவது 100 யூனிட்டுகளுக்கு 50 சதவீதம் மானிய கட்டணமும் விதிக்கப்படும் என்ற நிலை தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் கடைசி வாரத்தில் திருத்தப்பட்ட மின் கட்டண உயர்வு தொடர்பான விபரங்களை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.