பரவும் கொரோனா.. தமிழக அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்!

Aadmika
Mar 31, 2023,03:50 PM IST
சென்னை : ஏப்ரல் 01 ம் தேதியான இன்று முதல் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மாஸ்க் அணிந்து வருவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது.  இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னேச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்தில் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இதில் கொரோனா பரவலை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. 



இந்நிலையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் துவக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

ஏப்ரல் 1 முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் என அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.