அம்மாவுக்கு மட்டுமல்ல.. இனி குட்டீஸ்களுக்கும் அரசு பஸ் பயணம் இலவசம்!

Aadmika
May 24, 2023,01:10 PM IST
சென்னை : தமிழக அரசு பஸ்களில் இனி 5 வயது வரையிலான குழந்தைகள் பயணம் செய்வதற்கு கட்டணம் கிடையாது என தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு பஸ்களில் பல ஆண்டுகளாக 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. அதே போல் அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. 60 வயதிற்கு அதிகமான மூத்த குடிமக்களுக்கும் அரசு பஸ் பாஸ் வழங்கி கட்டணமில்லாமல் பயணம் செய்ய வழி செய்துள்ளது.



2021 ம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசு பஸ்களில் பெண்கள், திருநங்கைகளுக்கு கட்டணம் இல்லா வசதி வழங்கப்பட்டது. இது பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் குழந்தைகளுக்கான கட்டணம் இல்லா பஸ் பயணத்திற்கான வயது வரம்பை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. 

ஏற்கனவே 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த வயது வரம்பை தற்போது 5 வயதாக உயர்த்தி அறிவித்துள்ளது. இனி அரசு பஸ்கள் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். அரசின் இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் பெரும்பாலான மக்களுக்கு அரசு பஸ்களில் பயணமானது இலவசமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பெண்கள் மத்தியில் இலவச பஸ் பயண சலுகை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பஸ் பயணம் இலவசம் என்பது  பெரும் மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பலாம்.