தமிழக அரசின் பொது பாடத்திட்டம் கட்டாயமில்லை...அடுத்த மோதலுக்கு தயாராகும் கவர்னர்

Aadmika
Aug 22, 2023,02:26 PM IST
சென்னை : தமிழக அரசின் பொது பாடத்திட்டம் கட்டாயம் இல்லை என்ற தமிழக கவர்னர் ரவியின் புதிய அறிவிப்பு தமிழக அரசு - கவர்னர் இடையேயான அடுத்த மோதலுக்கு பிள்ளையார்சுழி போட்டுள்ளது. 

தமிழக அரசின் பொது பாடத்திட்டம் கட்டாயம் இல்லை என தமிழக பல்கலைக்கழகங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கி உள்ளார். யுஜிசி விதிகளுக்கு மாறாக பொது பாடத்திட்ட முறையை கொண்டு வர முடியாது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் பாடத் திட்டத்தை தாங்களே வடிவமைக்க விதி உள்ளது என பல்கலைக்கழகங்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பல்கலைக்கழக மானிய குழு தலைவர் அனுப்பிய கடிதத்தை மேற்கோள்காட்டி கவர்னர் விளக்கம் அளித்து, இந்த கடிதத்தை அனுப்பி உள்ளார். தமிழக அரசின் பாடத்திட்டத்திற்கு எதிராக கவர்னர் வழங்கி உள்ள இந்த அறிவுரை தமிழக அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரதம், கவர்னரின் அவசர டில்லி பயணம் ஆகியவை நடந்த இரண்டு நாட்களில் கவர்னரிடம் இருந்து இப்படி ஒரு அறிக்கை வந்துள்ளது அரசியல் ரீதியான மோதலை வலுவடைய வைத்துள்ளது. இதற்கு தமிழக அரசின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.