10ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு : 91.39 % பேர் பாஸ்.. மாணவிகளே பர்ஸ்ட்!

Aadmika
May 19, 2023,10:52 AM IST
சென்னை : தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்ல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. இதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 6 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 20 ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 9.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதே போல் மார்ச் 13 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 5 ம் தேதி வரை 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடைபெற்றன. இந்த இரண்டு தேர்வுகளின் முடிவுகளும் ஒரே நாளில், அதாவது மே 19 ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். இதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.66 சதவீதம் பேரும், மாணவர்கள் 88.16 சதவீதம் பேரும் தேர்வு பெற்றுள்ளனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  97.67 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. 97.53 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் சிவகங்கை மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 96.22 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. 

தமிழ்ப் பாடத்தில் ஒருவர் கூட நூற்றுக்கு நூறு வாங்கவில்லை.ஆனால் பிளஸ்டூ தேர்வில் 2 பேர் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம். 

11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய: http://www.tnresults.nic.in/tptsxrs.htm